கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்தி பணம்பறிப்பதை இதுவரை ரவுடிகள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். கொலை, கொள்ளை, வழிப்பறி, கவனத்தை திசை திருப்பி கொள்ளையடித்தல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடக் கத்திதான் பயன்படுத்துவர். ஆனால், இப்போதெல்லாம் கள்ளத் துப்பாக்கியைப் பயன்படுத்தி பணம்பறிப்பில் ஈடுபடும் செயல் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, சென்னையில் கடந்த ஆண்டு ராயபுரம் குடியிருப்பில் குடும்பப் பிரச்சனை காரணமாக நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம், யானைகவுனியில் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியான சம்பவம், கள்ளக்குறிச்சியில் ஒருவர் கொலை, பழனியில் ஒருவர் பலத்த காயம் என தொடர்ச்சியாகத் துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அனைத்திலும் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் மேற்குவங்க கள்ளச்சந்தையில் வாங்கப்பட்டவை என்பது விசாரணையில் தெரியவந்தது.
’ஆப்ரேஷன் டிஸ்ஹார்ம்’!
தமிழகத்தில் கள்ளத் துப்பாக்கி கலாச்சரத்தை தடுக்க, தமிழகக் காவல் துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் துப்பாக்கி கலாச்சாரம் ஓய்ந்தபாடில்லை என்றே கூறலாம்.
இந்த அபாயகரமான போக்கை முழுவதுமாக கட்டுப்படுத்தத் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்கீழ் ’ஆப்ரேஷன் டிஸ்ஹார்ம்’ முடுக்கிவிடப்பட்டது. இதன்படி ரவுடிகளிடம் நடத்திய திடீர் சோதனையில் 7 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது தமிழக காவல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அடுத்தடுத்து குற்றச் சம்பங்கள் அரங்கேறியுள்ளன. கடந்த வாரம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி, தொழிலதிபரை கடத்தி ரூ.25 லட்சம் பறிக்கப்பட்டது. அடுத்து, கடந்த 6-ம் தேதி டாஸ்மாக் ஊழியர்கள் துளசி தாஸ், சோமு ஆகியோர் பணி முடித்துவிட்டு சென்றபோது சிலர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு அவர்களிடம் இருந்த பணத்தைப் பறித்துள்ளனர். நேற்று அதே கும்பல், துப்பாக்கியால் மிரட்டி இந்திராணி என்பவரிடம் 5 பவுன் நகையை பறித்துள்ளனர்.
துப்பாக்கி வேணும்னா இவை வேணும்!
இத்தகைய குற்றச் சம்பவங்கள் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. சுதாகர் தலைமையில் போலீசார் தீவிரமாகத் தேடிவந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முர்தசா என்பவரை என்கவுன்ட்டர் செய்தனர். மற்றொருவரான நஹீம் அக்தர் கைது செய்யப்பட்டார். மேலும் இவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட கள்ளத் துப்பாக்கி யாரிடம் இருந்து வாங்கப்பட்டது என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது.
கள்ளத் துப்பாக்கி வாங்கப்படுவது எப்படி என உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ”ரவுடிகள், தொழிலதிபர் உட்பட பலர் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய்வரை கொடுத்து கள்ளத்தனமாக விற்கக்கூடிய துப்பாக்கியை வாங்கி, சர்வசாதாரணமாக அதை பாகங்களாகப் பிரித்து ரயில் மூலமாக பைகளில் போட்டு கொண்டு வருகின்றனர்” என்றார்.
உரிமம் பெற்ற துப்பாக்கியை வாங்கும் நடைமுறைகளை அவர் மேற்கொண்டு விளக்கினார். ”துப்பாக்கி உரிமம் அளிப்பதற்கான அதிகாரம் சென்னையை பொறுத்தவரையில் காவல் ஆணையருக்கும், மற்ற மாவட்டங்களில் ஆட்சியருக்கும் வழங்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட நபருக்குப் பாதுகாப்பு தேவைக்காகத் துப்பாக்கி உரிமம் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும்போது அடையாள சான்று, வருமான வரிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், தொழில்ரீதியான விவரங்கள், வங்கிப் பரிவர்த்தனைகள், வருமானவரி செலுத்திய ஆவணங்கள், சொத்து விவரங்கள், மனநல சான்றிதழ் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு எதிரிகளிடமிருந்து எதுவும் மிரட்டல் இருந்தால் அதுகுறித்த காவல் துறை முதல் தகவல் அறிக்கை நகல் போன்றவற்றை இணைக்க வேண்டும்.
இந்த ஆவணங்களை சரிபார்த்த பிறகு, மாவட்ட அலுவலகம் அல்லது காவல் ஆணையர் அலுவலகத்தால் விசாரணை நடத்தப்படும். குறிப்பாக சென்னையில் நுண்ணறிவு பிரிவு போலீசார் முழுமையாக விசாரணை நடத்துவர். அவர்கள், என்ன காரணத்துக்காகத் துப்பாக்கி வாங்க விரும்புகிறார்கள், எப்படிப்பட்ட அச்சுறுத்தல்கள் இருக்கின்றன என்கிற ரீதியில் விவரங்கள் சேகரிக்கப்படும்.
உரிமத்துடன் 10 தோட்டா ஓகே!
துப்பாக்கி வாங்க விரும்புபவர்கள் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள், சிவில் புகார்கள் இருந்தால் அவர்களது விண்ணப்ப மனு உடனே நிராகரிக்கப்படும். இதுதவிர, விண்ணப்பதாரர் மீது காவல் துறைக்கு வேறு எந்த வகையில் சந்தேகம் இருந்தாலும், உரிமம் கொடுப்பதை நிறுத்த காவல் ஆணையருக்கும், ஆட்சியருக்கும் எல்லா அதிகாரங்களும் உள்ளன. இதன் அடிப்படையில்தான் துப்பாக்கி உரிமம் வழங்கப்படுகிறது.
புதிதாகத் துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் 3 மாதங்களுக்குள் துப்பாக்கி வாங்கிவிட வேண்டும். இந்த உரிமம் 3 அல்லது 2 ஆண்டு காலத்துக்குச் செல்லுபடியாகும். அந்தக் காலக்கெடு முடிந்த பிறகு, கட்டாயம் உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்கும்போது ஏற்கெனவே துப்பாக்கி உரிமம் இருந்த காலத்தில் விண்ணப்பதாரரின் பேரில் காவல் துறையின் நற்சான்றிதழ் அவசியம் தேவை. உரிமம் பெற்ற காலத்தில் துப்பாக்கி வைத்திருப்பவர் மீது காவல் துறைக்குச் சந்தேகம் வந்தால், அவர்கள் விசாரணைக்கு எந்த நேரத்திலும் உட்பட வேண்டியிருக்கும். தேர்தல் காலங்களில் காவல் துறையிடம் துப்பாக்கியை ஒப்படைத்துவிட வேண்டும். இதுதவிர, அந்தத் துப்பாக்கி தொலைந்து போனால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் உடனடியாக புகார் கொடுக்க வேண்டும்.
துப்பாக்கி உரிமம் பெற்ற ஒருவர் 2 துப்பாக்கிகளை மட்டுமே வைத்துக்கொள்ள முடியும். 6-ல் இருந்து 10 தோட்டாக்கள்வரை வாங்க முடியும். துப்பாக்கி வாங்கியவர் வைத்திருக்கும் அல்லது பயன்படுத்தும் ஒவ்வொரு தோட்டாவுக்கும் அவரே பொறுப்பு. ஒரு மாநிலத்தில் உரிமம் பெற்றிருந்தால் அம்மாநிலத்தில் மட்டுமே துப்பாக்கியை வைத்துக்கொள்ளலாம். வேறு மாநிலங்களுக்குப் போகும்போது மறுபடியும், காவல் துறையின் அனுமதி பெறவேண்டும்.
’ஆர்ம்ஸ் டெபாசிட் சென்டர்’ தெரியுமா?
தற்காலிகமாக வெளிநாடு செல்லும்பட்சத்தில் துப்பாக்கியை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டுச் செல்ல வேண்டும். நிரந்தரமாகத் துப்பாக்கியை சரண்டர் செய்ய, அதற்கான உரிமத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
காவல் நிலையத்தில் ஒப்படைக்கவில்லை என்றால், ’ஆர்ம்ஸ் டெபாசிட் சென்டர்’ என்ற பெயரில் அரசின் அனுமதியோடு துப்பாக்கி விற்பனை செய்யும் மையத்தில் ஒப்படைக்கலாம். ஆனால், அது தொடர்பாக காவல் துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். விமானத்தில் துப்பாக்கிக் கொண்டு செல்லக் கூடாது. உரிமம் பெற்ற துப்பாக்கியால் விலங்குகளை வேட்டையாடக் கூடாது. மரங்களை துப்பாக்கியால் சேதப்படுத்தக்கூடாது. விண்ணப்பிக்கும்போது பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்தால், ஆயுதத் தடைச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். விலங்குகளை வேட்டையாடினால் விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழும் நடவடிக்கை எடுக்கப்படும்”.
இவ்வாறு காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.