48 மணி நேரத்தில் 2,512 ரவுடிகள் கைது: அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய சைலேந்திரபாபு


திமுக அரசு பொறுப்பேற்றதும் நேர்மையான துணிச்சலான அதிகாரிகளைத் தேடித்தேடி கொண்டுவந்து உயர் பதவிகளில் அமர்த்தியது. அப்படிக் கொண்டுவரப்பட்டவர்களின் ஒருவர்தான் சைலேந்திரபாபு. தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு டிஜிபி-யாக அவர் நியமிக்கப்பட்டபோது சரியான தேர்வு என்று பாராட்டாதவர்களே இல்லை. கடந்த 4 மாத காலமாக சைலன்டாக இருந்த சைலேந்திரபாபு, இப்போது ஆக்‌ஷனில் இறங்கியிருக்கிறார்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்வது அதிகரித்துள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்த முடிவுசெய்த டிஜிபி சைலேந்திரபாபு, தமிழகம் முழுவதுமுள்ள ரவுடிகளை கைது செய்யவேண்டும், அதற்கு 48 மணி நேரம் மட்டுமே அவகாசம் என்று காவல் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று முன்தினம் (செப்.23) மாலை 4 மணிக்கு ரவுடிகள் வேட்டையைத் தொடங்கியது தமிழக போலீஸ். சென்னையில்தான் முதன்முதலில் வேட்டை தொடங்கியது. அன்று விடிய விடிய நடந்த தேடுதல் வேட்டையில் குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர்கள், வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள், 350 அரிவாள்கள், கஞ்சா பொட்டலங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டத்தில் 339 பேர், விழுப்புரம் மாவட்டத்தில் 13 ரவுடிகள், நாமக்கல் மாவட்டத்தில் 38 ரவுடிகள், உட்பட தமிழகம் முழுவதும் போலீஸாரின் அதிரடி வேட்டையில் கடந்த 2 நாட்களில் மொத்தம் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களிடம் இருந்து 5 துப்பாக்கிகள், 934 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, “ஏ பி சி டி என 4 வகையாக பிரிக்கப்பட்டு ரவுடிகளைச் சுற்றி வளைத்து வருகிறோம். மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் பாயும். பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குற்றச்செயல்களை தடுப்பதற்கான காவல் துறையின் அதிரடி நடவடிக்கை தொடரும்” என்றார்.

இந்த அதிரடி வேட்டையைத் தொடர்ந்து அடுத்தகட்ட பாய்ச்சலையும் சைலேந்திரபாபு தொடங்கியிருக்கிறார். குற்றவாளிகளின் களமாக இருக்கும் தென்மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலைச் சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கைகளை முடுக்கிவிட இப்போது அங்கே முகாமிட்டிருக்கிறார்.

இன்று மதுரையில் 6 மாவட்ட காவல் துறை உயரதிகாரிகளுடன் சட்டம் - ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்திய அவர், அடுத்ததாக நெல்லை செல்கிறார். அங்கு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய 4 மாவட்ட காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். முதல்கட்டமாக, குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை முன்னரே இனம்கண்டு அவர்கள் எந்தவிதமான குற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் தடுக்கும் நடவடிக்கை களை மேற்கொள்ளும்படி இன்றைய கூட்டத்தில் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு சைலேந்திரபாபு கட்டளையிட்டுள்ளார்.

x