பல கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில், சென்னையில் கற்பூர வியாபாரிக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித் துறை சோதனை.
சென்னை, பூந்தமல்லி சாலை தாசப்பிரகாஷ் அருகே உள்ள பிரின்ஸ் கோர்ட்யார்டு என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர் ஃபாரஸ் ஜெயின். இவர், மொத்த கற்பூர வியாபாரம் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், பாரஸ்ஜெயின் நடத்திவரும் நிறுவனம் பல கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்ததாக, வருமானவரித் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இன்று (செப்.23) காலை 7.30 மணிமுதல் பாரஸ்ஜெயின் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான அலுவலகம், குடோன் ஆகியவற்றில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், சென்னை, கொத்தால்சாவடி ஸ்டார்டன் முத்தையா தெருவில் உள்ள அவரது மேலாளர் வீட்டில், வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கற்பூர வியாபாரிக்குச் சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக, வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.