2019-ம் ஆண்டு, சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கடத்தி சொத்துகளை அபகரித்ததாக, காவல் உதவி ஆணையர் சிவகுமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட அதிகாரிகள், இந்துமகா சபா கட்சியின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ, தொழிலதிபர்கள் வெங்கடேஷ், சீனிவாசராவ் உட்பட 10 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது.
தொழிலதிபர் ராஜேஷ் அளித்த அந்தப் புகாரின் பேரில் காவல் துறை விசாரணை நடத்தினர். விசாரணையில், காவல் துறை அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கடத்தல் வழக்கில் தொடர்புடைய உதவி ஆணையர் சிவகுமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், காவலர்கள் கிரி, பாலா, ஷங்கர் மற்றும் கோடம்பாக்கம் ஸ்ரீ, வெங்கடேஷ், சீனிவாசராவ் உட்பட 10 பேர் மீது 5 பிரிவுகளின்கீழ் சிபிசிஐடி வழக்குப் பதிவுசெய்தனர்.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த கோடம்பாக்கம் ஸ்ரீயை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள உதவி ஆணையர் உட்பட 9 பேரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் மீது சிபிசிஐடி போலீஸார் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என உள்துறைச் செயலாளர் பிரபாகர், முதன்மைச் செயலாளர் உதயசந்திரன், காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு, சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் ஆகியோரிடம் அறப்போர் இயக்கத்தினர் ஆன்லைன் மூலமாகப் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
இந்தப் புகாரில், தொழிலபதிபர் ராஜேஷ் கடத்தப்பட்ட விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்குத் தொடர்பு உள்ளது என்று புகாரில் தெரிவித்திருப்பதாகவும், ஆனால் எஃப்.ஐ.ஆரில் அவரது பெயரைச் சேர்க்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இந்த வழக்கைத் தீர விசாரித்து, ஐபிஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் உடனடியாக தலைமறைவாக உள்ள 6 காவலர்கள் உட்பட 9 பேரையும் கைது செய்ய வேண்டும் என்றும், ஏற்கெனவே தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகள் கழித்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர். ஒரு சில காவல் அதிகாரிகள் செய்யும் தவறினால் ஒட்டுமொத்தக் காவல் துறைக்கும் கெட்ட பெயர் ஏற்படுவதால், இந்த வழக்கு விசாரணை முடியும் வரை ஐபிஎஸ் அதிகாரியை சஸ்பெண்ட் செய்துவிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் அறப்போர் இயக்கத்தினர் அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.