சென்னை, புழல் காவாங்கரை கே.எஸ் நகரைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா(40). இவர், மனித நேய மக்கள் கட்சியின் மாதவரம் பகுதித் தலைவராக உள்ளார். நேற்று (செப்.20) இவர், புழல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், புழல் புத்தகரத்தில் யோகக்குடில் ஆசிரமத்தை நடத்திவரும் புழல் இந்திரா நகரைச் சேர்ந்த சிவக்குமார் எனும் சாமியார், யூ-டியூபில் இஸ்லாம் மார்க்கம் குறித்தும், நபிகள் நாயகம் குறித்தும், இஸ்லாம் பெண்கள் பற்றியும் ஆபாசமாகப் பேசி அவதூறுக் கருத்துகளைப் பதிவிட்டுவருவதாகவும், இது இஸ்லாம் மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இரு மதத்தினரிடையே கலவரத்தைத் தூண்டும் வகையில், தொடர்ந்து இதுபோன்ற காணொலிகளைப் பதிவிட்டுவரும் சிவக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்துப் புழல் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிவக்குமார், நபிகள் நாயகம் குறித்து அவதூறு பரப்பும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டது உறுதியானது.
இதையடுத்து, இன்று சாமியார் சிவக்குமாரைப் புழல் போலீஸார் கைது செய்தனர்.
இதற்கிடையில், சிவக்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று இரவு வண்ணாரப்பேட்டை, சென்ட்ரல், புழல், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.