சென்னையில் மெத்ஆம்பிடமின் போதைப்பொருள் கடத்தல்: இருவர் கைது


இளைஞர்கள் மத்தியில் கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்களைத் தாண்டி விலையுயர்ந்த சர்வதேச போதைப் பொருளான கொக்கைன், டைடால், ட்ராமடால், மெத்ஆம்பிடமின் போன்றவை பழக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சென்னை போன்ற பெருநகரங்களில் நடைபெறும் கேளிக்கை நிகழ்ச்சிகளில், இளைஞர்கள் இவற்றைப் பயன்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது.

இதையடுத்து போதைப் பொருளின் புழக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் 'Drive Against drugs' என்ற ஆப்ரேஷனை, அனைத்து காவல் மாவட்ட துணை ஆணையர்களின் தலைமையில் சென்னை காவல் துறை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், காரில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக கீழ்ப்பாக்கம் துணை ஆணையருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சேத்துப்பட்டு நமச்சிவாயபுரம் பாலம் அருகே, துணை ஆணையரின் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது, அதில் சுமார் 600 கிராம் எடையுடைய மெத்ஆம்பிடமின் கடத்தப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து போதைப் பொருள், கார் ஆகியவற்றைத் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். அடுத்து, காரை ஓட்டிவந்த செங்குன்றம் மருதுபாண்டி நகரை சேர்ந்த சிவகுமார் (49) மற்றும் காசிமேடு பகுதியைச் சேர்ந்த பிரியாணி மாஸ்டர் அஹமத் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரையும் சேத்துப்பட்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இவர்கள் இருவரும் போதைப்பொருள் கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததும், இவர்கள் மீது போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

மேலும் மெத்ஆம்பிடமின் ஒரு கிராம் 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மொத்த மதிப்பு 24 லட்சம் ரூபாய் எனவும் தெரியவந்தது. சர்வதேச போதைப் பொருள் சந்தையில் இதன் மதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

x