கடந்த 2011-ம் ஆண்டு, தமிழகத்துக்கு வந்த பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானியைக் கொல்ல குண்டு வைத்ததுடன் பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்களை கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டியது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு வழக்கு, ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆள் சேர்த்தது உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய பயங்கரவாதிகளை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதில் பிலால் மாலிக்கும் ஒருவர்.
இந்நிலையில், புழல் மத்தியச் சிறையில் உள்ள பிலால் மாலிக் இன்று காலை தனது அறையிலிருந்த கொசு வலையை எடுத்த போது, அதிலிருந்த சாரைப் பாம்பு அவரை கடித்தது. உடனே பிலால் மாலிக் அந்த பாம்பை அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பிலால் மாலிக்கை சிறைக் காவலர்கள் மீட்டனர். பலத்த பாதுகாப்புடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். சிகிச்சையின்போது பிலால் மாலிக்கின் உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அவருக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு, மீண்டும் சிறைக்குத் திருப்பி அழைத்துச் செல்லப்படுவார் என்பது தெரியவந்துள்ளது.