பெயின்ட் அடித்த தொழிலாளர் 2-வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழப்பு


சித்தரிக்கப்பட்டப் படம்

வீட்டில் பெயின்ட் அடிக்கும்போது சாரம் சரிந்ததில், 2-வது மாடியிலிருந்து விழுந்து ஒருவர் பலியானார், மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

சென்னை, வில்லிவாக்கம், சிட்கோ நகர் 50-வது தெருவைச் சேர்ந்தவர் கலீல் ரஹமான் (61). இவர் இரண்டடுக்கு கொண்ட புதிய வீடு ஒன்றை தன்னுடைய இருப்பிடத்திலேயே கட்டி வருகின்றார். இதற்கான சண்முகம் என்பவருடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுக் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த செல்வகுமார்(31), ஜான்(32) ஆகிய இரு கட்டிடத் தொழிலாளர்கள் இன்று காலை வீட்டில் சாரம் அமைத்து அதன்மேல் ஏறி சுண்ணாம்பு அடித்தனர்.

அப்போது திடீரென சாரம் சரிந்ததில் செல்வகுமார், ஜான் இருவரும் தவறி கீழேவிழுந்தனர். பலத்த காயம் ஏற்பட்டு செல்வகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ஜானை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வில்லிவாக்கம் போலீஸார், செல்வகுமார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த போலீஸார், வீட்டு உரிமையாளர் கலீல் ரஹ்மான், ஒப்பந்ததாரர் சண்முகம் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x