ஆன்லைன் விளையாட்டு ஆசை: மாணவனிடம் ரூ.2 லட்சம் அபகரிப்பு


சென்னை. ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் தனியார் கல்லூரியில் பிகாம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர்கள் இருவர். மாணவனின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள்.

ஆன்லைனில் ‘ப்ரீ பையர்’ விளையாட்டு மூலம் அதிகப் பணம் சம்பாதிக்கலாம் என ஆசைகாட்டி இருக்கிறார்கள். மேலும், ப்ரீ பையர் கேம் விளையாட புதிதாகக் கணக்கு (account) தொடங்க வேண்டும் என்றும் அதற்குப் பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்கள்.

இதை நம்பிய கல்லூரி மாணவன், மர்ம நபர்கள் கொடுத்த வங்கிக் கணக்குக்கு ஆன்லைன் மூலமாக ஒரு தொகை அனுப்பியுள்ளார். ஆனால், அவர்கள் குறிப்பிட்டது போல் விளையாட்டு கணக்கு தொடங்கிக் கொடுக்கவில்லை. உடனே மாணவன் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, மேலும் பணம் அனுப்புமாறு கூறியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து மாணவன் சிறுகச் சிறுக ரூ.2.10 லட்சம் வரை அவர்களது கணக்கில் செலுத்தி உள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னரும் அந்த கும்பல், மாணவனுக்கு எந்த விளையாட்டு கணக்கும் தொடங்காமல் மோசடி செய்தனர்.

இதுகுறித்து மாணவன் அவர்களை மீண்டும் தொடர்பு கொண்ட போது, அந்த கும்பல் மாணவனுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அவரது செல்போனில் உள்ள அனைத்து தகவல்களும் தங்களிடம் உள்ளதாகவும், நண்பர்கள், உறவினர்களுக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பிவிடுவதாகவும் மிரட்டல் விடுத்தனர். இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவன், இதுகுறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x