நடிகர் விமலின் விலை உயர்ந்த செல்போன் திருட்டு


நடிகர் விமல்

’களவாணி’, ’கலகலப்பு’, ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ’தேசிங்கு ராஜா’ உட்பட பல தமிழ்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விமல். இவர், சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், "கடந்த 12-ம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த அஜய் வாண்டையார் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அப்போது ரசிகர்கள் என்னுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார்கள். பிறகு விலை உயர்ந்த என் செல்போனை அங்கு அமர்ந்திருந்த இடத்தில் வைத்துவிட்டுப் பேசிக் கொண்டிருந்தேன். திரும்பி வந்து பார்த்தபோது செல்போன் காணவில்லை. கடந்த 3 நாட்களாக தேடிப் பார்த்தும் செல்போன் கிடைக்கவில்லை. எனவே, காவல் துறை என்னுடைய செல்பேசியைக் கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

நடிகர் விமலின் இந்தப் புகார் கானாத்தூர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டதை அடுத்து, கானாத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், மதுரையில் நடிகர் சூரியின் அண்ணன் வீட்டு திருமண விழாவில், 10 பவுன் நகையை திருடியதாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை மதுரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் விக்னேஷிடம் நடத்திய விசாரணையில், தான் மதுரையில் திருடுவதற்கு முன்பாக கானாத்தூர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஆகையால், நடிகர் சூரி வீட்டுத் திருமணத்தில் நகை திருடிய அதே நபர் விமலின் செல்போனை திருடியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x