அரக்கோணத்தில் ஏடிஎம் மிஷினை வெட்டி ரூ. 5 லட்சம் கொள்ளை


அரக்கோணம் அருகே, ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாமல் வெல்டிங் இயந்திரம் மூலம் வெட்டி ரூ.5 லட்சத்தைக் கொள்ளையடித்தனர் வடமாநில கொள்ளையர்கள்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூர் நெடுஞ்சாலையில் ஆக்சிஸ் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. நேற்று இரவு ஏடிஎம் மையத்தில் புகுந்த கொள்ளையர்கள், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்த பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றனர்.

ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாமல் திணறிய கொள்ளையர்கள், வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை வெட்டி பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். இன்று காலை பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த அரக்கோணம் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி தலைமையிலான போலீஸார் இக்கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், இந்த ஏடிஎம் மையத்தில் பாதுகாவலர்கள் யாரும் இல்லாததை அறிந்த கொள்ளையர்கள், ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் இயந்திரம் கொண்டு உடைத்தது தெரியவந்தது.

செப்டம்பர் 15-ம் தேதி இந்த ஏடிஎம்மில் ரூ.8.5 லட்சம் நிரப்பப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தியது போக, பாக்கி சுமார் ரூ.5 லட்சம்வரை ஏடிஎம்மில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

மேற்கொண்டு போலீஸார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தபோது, வட மாநில கொள்ளை கும்பல் இச்சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்து அவர்களைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் இயந்திரத்தைக் கொண்டு வெட்டி பணத்தை எடுத்துச் சென்ற சம்பவம். வங்கி அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x