அசாம் அமைச்சரின் மருமகன் எனக் கூறி ரூ.1.25 கோடி மோசடி


சென்னை விருகம்பாக்கம் இளங்கோ நகர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர் சைதாப்பேட்டையில் தொலைதூரக் கல்வி நிலையம் ஒன்றை நடத்திவருகிறார். இவருக்கு அறிமுகமான கார்த்திக் பிரசன்னா என்பவர், தான் அசாம் மாநில அமைச்சர் ஒருவரின் மருமகன் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் இந்திய விமானப் படையில் பைலட் எஸ்கார்ட் ஆபீஸராக உள்ள அடையாள அட்டையைக் காண்பித்துள்ளார்.

ஒருகட்டத்தில், ரயில்வே துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும், தலா ஒருவருக்கு 3.5 லட்ச ரூபாய் கொடுத்தால் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்குக் கமிஷன் தொகையாக 25 ஆயிரம் ரூபாயும், ஏஜெண்டாக வேலையும் பெற்றுத் தருவதாக முத்துக்குமரனிடம் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி முத்துக்குமரன் கடந்த 2018-ம் ஆண்டு தனது நண்பர்கள், உறவினர்களிடமிருந்து பெற்ற 1.25 கோடி ரூபாய் பணத்தை கார்த்திக் பிரசன்னாவின் மனைவி ஜூரி ராணி தேவியின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.

பல மாதங்களாகியும் கார்த்திக் பிரசன்னா கூறியது போல் வேலை வாங்கித் தராததால் சந்தேகமடைந்த முத்துக்குமரன், ரயில்வே அலுவலகத்திற்குச் சென்று விசாரித்தபோது கார்த்திக் பிரசன்னா அசாம் அமைச்சரின் மருமகன் எனக் கூறியது பொய் என்றும், இதே போல் பல பேரிடம் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து முத்துக்குமரன் பணத்தைத் திருப்பித் தருமாறு கார்த்திக்கிடம் கேட்டதற்கு எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கம் அருகே வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். அங்கு சென்ற முத்துக்குமரனை அடையாளம் தெரியாத 4 நபர்கள் போலீஸ் எனக்கூறி காரில் கடத்தி கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு விடுதியில் அடைத்து வைத்து நிர்வாணமாகப் படம் எடுத்து 80 ஆயிரம் பணத்தைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

பின்னர் மதுரை ரவுடி கணபதி, கார்த்திக் பிரச்சன்னா, மற்றும் ஐபி.எஸ் அதிகாரி ஒருவருக்கு பாதுகாப்பு காவலராக உள்ள அருண் ஆகியோர் சேர்ந்து மீண்டும் முத்துக்குமரனிடம் 15 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதனையடுத்து வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட கார்த்திக் பிரசன்னா, காவலர் அருண், ரவுடி கணபதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து தனது பணத்தை மீட்டுத் தருமாறு முத்துக்குமரன் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

அப்புகாரின் உண்மைத் தன்மை குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x