தெலங்கானா சிறுமி கொலையில் தேடப்பட்டவர் தற்கொலை


ஹைதராபாதில், 6 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்குப் பிறகு படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக தேடப்பட்ட பள்ளகொண்ட ராஜு (30) ரயிலில் அடிபட்டு இறந்துகிடந்தார்.

இன்று (செப்.16) அவருடைய சடலம் கிடைத்ததை அடுத்து, தெலங்கானா காவல் துறையின் 5 நாள் தேடல் முடிவுக்கு வந்தது. அவரைப் பற்றிய துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு என்று கூட அறிவிக்கப்பட்டிருந்தது.

ஹைதராபாத் சென்று கொண்டிருந்த கொனார்க் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டார். முகம் சிதைந்திருந்தது. கையில் பச்சை குத்தியிருந்ததை வைத்து அவரை காவல் துறையினர் அடையாளம் கண்டனர்.

பாலியல் வல்லுறவுக்குப் பிறகு கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு, தெலங்கானா அரசு சார்பில் ரூ.20 லட்சம் கருணைத் தொகையாக வழங்கப்பட்டது. மாநில குழந்தைகள், மகளிர் நலத் துறை அமைச்சர் சத்யவதி ரத்தோட், உள்துறை அமைச்சர் முகம்மது மஹ்மூத் அலி ஆகியோர் சிறுமியின் குடும்பத்தாரைச் சந்தித்து தொகையை வழங்கிவிட்டு ஆறுதல் கூறினர்.

இச்சம்பவம் நடந்ததை அறிந்ததும் பலரும் ஆவேசப்பட்டனர். தெலங்கானா தொழிலாளர் நலத் துறை அமைச்சர் மல்லா ரெட்டி, குற்றஞ்செய்தவரை காவல் துறையினர் தேடுதல் வேட்டையின்போது, ‘என்கவுன்டர் கொலை’ செய்தால்கூட தவறில்லை என்றார்.

2019 டிசம்பர் 6-ல், ஹைதராபாதில் 27 வயது கால்நடை பெண் மருத்துவரை 4 பேர் வழிமறித்து, பாலியல் வல்லுறவு செய்து கொன்றனர். அந்த நால்வரும் பின்னர் பிடிபட்டு காவல் துறையினரால் சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, காவலர்களின் துப்பாக்கிகளைப் பறித்துக்கொண்டு ஓட முயன்றதாகவும் அப்போது நடந்த மோதலில் 4 பேரும் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. 4 பேரின் குடும்பத்தவர்களும் அந்தச் சம்பவத்தை நம்ப மறுத்து, காவல் துறையினர் வேண்டுமென்றே கொன்றதாகக் குற்றஞ்சாட்டினர்.

அதை விசாரிக்க உச்ச நீதிமன்றம் நியமித்த குழு ஹைதராபாதில் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போதுதான், இந்தச் சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது. ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்படும், பள்ளகொண்ட ராஜுவின் முகம் சிதைந்திருப்பது சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.

x