சென்னை கேகே நகரில் ரவுடி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு


சென்னை, கேகே நகரில் கொலை, கும்பல் மோதல், வாகனங்களைச் சூறையாடுவது என ரவுடிகள் தொடர்ந்து அட்டகாசம் செய்துவருவதாகப் புகார்கள் எழுந்திருக்கின்றன. இதுபோன்ற சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள்.

நாட்டு குண்டு வீசப்பட்டதில் சேதமடைந்த கதவு

சென்னை, கேகே நகர், வன்னியர் தெருவைச் சேர்ந்த ரவுடி சுமன்ராஜ் (18). இவர் தனது தந்தை செல்வம், தாய் ஜோதி மற்றும் தங்கையுடன் வசித்துவருகிறார். நேற்று இரவு சுமன்ராஜ் தனது குடும்பத்துடன் வீட்டில் இருந்தபோது அரிவாள், நாட்டு் வெடிகுண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்த 6 பேர் கொண்ட ரவுடி கும்பல், சுமன்ராஜைக் கொலை செய்யும் நோக்கத்துடன் அவர் வீட்டின் மீது 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசியது.

குண்டுவீச்சில் சேதமடைந்த ஜன்னல்கள்

பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்துச் சிதறியதில் வீட்டின் கதவுகள் சேதமடைந்தன. இதில் சுமன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். வெடிகுண்டு சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்ததை அடுத்து, ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தது.

இது குறித்து சுமன் கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பழிக்குப் பழியாகக் கொலை முயற்சி

இதுதொடர்பாகப் போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2018-ல் சுமன்ராஜின் அண்ணன் ரவுடி புறா மணியை, மற்றொரு ரவுடி கும்பலைச் சேர்ந்த கோழி பாபு, தக்காளி பிரபா மற்றும் அவரது கூட்டாளிகள் மதுரவாயல் அருகே வைத்து கொலை செய்தனர். ரவுடி புறா மணியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரைக் கொலை செய்த கோழி பாபு, தக்காளி பிரபா, ஆகியோரைக் கொலை செய்ய சுமன்ராஜ் திட்டம் தீட்டினார். அதன்படி நேற்று முன்தினம் சுமன்ராஜும் அவரது நண்பர்கள் அஜித், யமஹா வினோத், விக்கி உள்ளிட்டோர் பெரியகுளம் பகுதியில் வசிக்கும் கோழி பாபு வீட்டுக்குச் சென்று நோட்டமிட்டு கொலை செய்ய முயன்றனர். சூழ்நிலை சாதகமாக அமையாததால், சுமன் தனது கூட்டாளிகளுடன் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.

இதற்கிடையே சுமன்ராஜ் தங்களைக் கொலை செய்ய திட்டம் தீட்டியதை அறிந்த கோழி பாபு, தக்காளி பிரபா, கொரில்லா உள்ளிட்ட ரவுடிகள் அவரைக் கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி நேற்று இரவு சுமன்ராஜின் வீட்டுக்குச் சென்ற அவர்கள், வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி அவரைக் கொலை செய்ய முயன்றனர் என விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து சுமன்ராஜிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாகத் தனிப்படைகள் அமைத்து கோழி பாபு, தக்காளி பிரபா, கொரில்லா உள்ளிட்டோரைத் தேடிவருகின்றனர்.

வாகனங்கள் சூறையாடல்

நேற்று முன்தினம் கேகே நகர், வளசரவாக்கம், விருகம்பாக்கம் பகுதிகளில் ரவுடிகள் கத்தியுடன் உலா வந்ததுடன் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பைக், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர்.

இந்தச் சூழலில், நேற்று கேகே நகரில் ரவுடி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பவமும் அரங்கேறியுள்ளது. இதனால், கேகே நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரவுடிகளின் கொட்டத்தை அடக்குமாறு, காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

x