‘கணவர் ரத்தக் காயங்களுடன் வீடு திரும்புவார்’ என மிரட்டி புதுமணப் பெண்ணிடம் தாலி செயின் திருட்டு


சென்னை, ராயப்பேட்டை, யானைக்குளம் 6-வது தெருவைச் சேர்ந்தவர் ரியானா பேகம் (19). இவருக்குத் திருமணமாகி ஒன்றரை மாதங்களே ஆன நிலையில், இவரது பெற்றோருக்கு உடல் நிலை சரியில்லாததால் தாய் வீட்டில் தங்கி அவர்களைக் கவனித்துவந்துள்ளார்.

இந்நிலையில் ரியானா, ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், இன்று காலை சாம்பிராணி போடுவதாக மர்ம நபர் ஒருவர் வீட்டிற்கு வந்ததாகவும், ‘உன் கணவருக்கு ஆபத்து இருக்கிறது. வெளியில் சென்றுள்ள அவர் திரும்பி வரும்போது ரத்தக் காயத்துடன்தான் வருவார்’ என கூறி பயமுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வீட்டில் பில்லி சூனியம் இருப்பதாகவும் கூறியவர் அவற்றை எடுக்க வேண்டுமென்றால் முட்டை, எலுமிச்சம் பழம் ஆகியவற்றை வாங்கிவருமாறு கூறியுள்ளார். பயந்துபோன ரியானா, அவர் கூறியதை நம்பி அவர் கேட்ட பொருளை வாங்கிக் கொடுத்துள்ளார்.

பின்னர் பூஜை செய்ய ரியானா அணிந்திருந்த தாலியை கழற்றித் தருமாறு அந்த நபர் கேட்டிருக்கிறார். இரண்டரை சவரன் தாலியை பேப்பரில் மடித்து பானைக்குள் போட்டு துணியை வைத்துக் கட்டி நீண்ட நேரமாக மந்திரங்கள் சொல்லி, தலையில் கண் மை வைத்து விட்டு பில்லி சூனியம் எடுக்கப்பட்டுவிட்டதாக ரியானாவிடம் கூறியிருக்கிறார். மேலும் பானையில் உள்ள நகைகளை, ஒரு மணி நேரம் கழித்து திறந்து எடுத்துக்கொள்ளுமாறு கூறியதுடன் பில்லி சூனியம் எடுத்ததற்குக் கட்டணமாக 300 ரூபாயும் வாங்கிச் சென்றுள்ளார்.

ஒரு மணி நேரம் கழித்து பானையைத் திறந்து பார்த்தபோது, பேப்பரில் நகைக்குப் பதிலாக கல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

உடனே இதுகுறித்து ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அந்த நபரைத் தேடிவருகின்றனர்.

ஒரே இடத்தில் 2 திருட்டு

இதேபோல், திருவல்லிக்கேணி பகுதியில் உங்களது மகனுக்கு வரன் அமைந்துள்ளதாகக் கூறி முதியவர் ஸ்ரீனிவாச வரதன்(73) என்பவரின் கவனத்தைத் திசைதிருப்பி, 5 சவரன் நகையை மர்ம நபர் கொள்ளையடித்திருக்கிறார். மேலும், பக்கத்து வீட்டில் வசிக்கும் மூதாட்டி அனுராதாவிடம் செல்போன் பேச சிக்னல் கிடைக்கவில்லை எனக் கூறி, அவரது வீட்டுக்குச் சென்று 15 ஆயிரம் பணத்தைத் திருடிச் சென்றார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x