பயங்கரவாதியால் சுட்டுக்கொல்லப்பட்ட ஸ்ரீநகர் எஸ்.ஐ-க்கு மக்கள் இறுதி அஞ்சலி


ஸ்ரீநகரில் நேற்று (செப்.12) பயங்கரவாதியால் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் அர்ஷத் அகமது மிர் (25) இறுதிச் சடங்கு, இன்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கடந்த ஓராண்டாகக் காவலர் பயிற்சி பெற்ற அகமது மிர், சில மாதங்களுக்கு முன்னர்தான் புதிய பொறுப்பில் வேலைக்குச் சேர்ந்தார். போலீஸ் காவலில் இருந்த ஒரு கைதியை மருத்துவப் பரிசோதனைக்காக நேற்று அவர் அழைத்துச் சென்றிருந்தார். பரிசோதனை முடிந்த பிறகு கைதியை அழைத்துக்கொண்டு மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தார். அப்போது அவருக்குப் பின்னாலிருந்து வந்த பயங்கரவாதி மிக அருகிலிருந்தபடி துப்பாக்கியால் அகமது மிரின் தலையைக் குறிவைத்து 3 முறை சுட்டான். இதில் பலத்த காயமடைந்த அவர் சுருண்டு விழுந்தார். அதைப் பார்த்த ஒருவர் பயங்கரவாதியைப் பிடிக்க சிறிது தொலைவு அவன் பின்னால் ஓடினார். பிறகு காயமடைந்த அகமது மிருக்கு உதவி செய்வதற்காகத் திரும்பி வந்தார். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசி டிவி கேமராவில் பதிவாகியிருக்கின்றன. படுகாயமடைந்த அகமது மிர் உடனடியாக ஷேரி காஷ்மீர் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இன்று ஜம்மு – காஷ்மீர் பகுதியின் குப்வாரா மாவட்டத்தில் கல்முனா என்ற சொந்த கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட உடல் வந்தபோது, ஆயிரக்கணக்கான கிராம மக்கள் அங்கு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதற்கிடையே, கொலையாளியின் அடையாளம் தெரிந்துவிட்டது, அவரைப் பிடித்துவிடுவோம் என்று காவல் துறைத் தலைவர் தில்பக் சிங் சூளுரைத்திருக்கிறார்.

x