மஜக நிர்வாகி கொலை வழக்கு: கஞ்சா வியாபாரி மீது நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்


காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி

மக்கள் ஜனநாயகக் கட்சி பிரமுகர் வசீம் அக்ரம் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய கஞ்சா வியாபாரி டீல் இம்தியாஸை, முந்தைய வழக்கு ஒன்றில் கைதுசெய்யத் தவறியதாக வாணியம்பாடி நகரக் காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

கடந்த ஜூலை 26-ம் தேதி முன்னாள் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையிலான போலீஸார் ஜீவா நகர் பகுதியில் டீல் இம்தியாஸ் என்பவர் கிடங்கில் சோதனை நடத்தினர். சோதனையில் 10 பட்டாக்கத்திகள்,10 செல்போன், 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து 3 பேரைக் கைது செய்தனர். இதில் டீல் இம்தியாஸ் உட்பட 2 பேர் தலைமறைவாகினர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாணியம்பாடி அருகே மக்கள் ஜனநாயகக் கட்சி பிரமுகர் வசீம் அக்ரம் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் டீல் இம்தியாஸ் உள்ளிட்ட கஞ்சா கும்பல் இவரைக் கொலை செய்தது தெரியவந்தது.

தலைமறைவாக உள்ள கஞ்சா வியாபாரி இம்தியாஸ் முன்பே கைதுசெய்யப்பட்டிருந்தால் மஜக நிர்வாகி கொலைச் சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், கஞ்சா வியாபாரியைக் கைது செய்யாமல் இருந்த வாணியம்பாடி நகரக் காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். வேலூர் சரக டிஐஜி ஏ சி பாபு உத்தரவின் பேரில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

x