சென்னையில் தடகள வீரரிடம் ரூ.23 கோடி நில மோசடி!


ஷேக் அப்துல் ஹமீது
நிலத்தில் அத்துமீறி நுழைந்து நிறுவன பலகைகளை உடைத்தனர்.. இவர்களுக்கு ஆதரவாக காவல் ஆய்வாளர் ஒருவர் உடந்தையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

கடந்த 2002 -ல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ‘டென் பின் பவுலிங்க்’ விளையாட்டு பிரிவில் தங்கம் வென்றவர் ஷேக் அப்துல் ஹமீது. இவர் நில மோசடி தொடர்பாக பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகார் சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தடகள வீரரான ஷேக் அப்துல் அமீது, டெல்லியை அடிப்படையாக வைத்து ‘ஏ.எச்.ஏ ப்ரோஜெக்ட்’ என்ற பெயரில் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலை நடத்தி வந்தார். இவர், சென்னையிலுள்ள தனது நண்பர் அசமத்துல்லா என்பவர் மூலம் அறிமுகமான பாலாஜி, மீனா ஆகியோர் மூலமாக நிலம் வாங்கும் முயற்சியி ஈடுபட்டார். இந்த விவகாரத்தில் பாலாஜியும் மீனாவும் தன்னிடம் 23 கோடி ரூபாய் மோசடி செய்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்த ஷேக் அப்துல் அமீது, கடந்த அக்டோபர் மாதமே போலீஸில் புகார் செய்தார். இந்தப் புகாரை திரும்பப்பெறுமாறு, அசமத்துல்லாவின் நண்பரான மஸ்ஜித் அஜ்முதின் என்பவர் ஷேக்கை மிரட்டினாராம். அத்துடன், சென்னையில் எந்த தொழிலும் செய்யக்கூடாது எனக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.

இதன் பின்னணியில் தனது நண்பர் அசமத்துல்லா இருப்பது தெரியவந்ததால் அவர் மீதும், மஸ்ஜித் அஜ்முதின், மீனா, பாலாஜி, மற்றும் வழக்கறிஞர் நிவாஸ் ஆகியோர் மீது பள்ளிக்கரணை போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார் ஷேக்.

ஷேக் அப்துல் ஹமீது

இவர்கள் அனைவரும் தன்னுடைய மற்ற சொத்துகளையும் அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவர்கள் கோவிலம்பாக்கத்தில் உள்ள 4.12 ஏக்கர் நிலத்தில் அத்துமீறி நுழைந்து நிறுவன பலகைகளை உடைத்ததாகவும், அவர்களுக்கு ஆதரவாக காவல் ஆய்வாளர் ஒருவர் செயல்படுவதாகவும் தனது புகாரில் ஷேக் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தப் புகார் மீது பள்ளிக்கரணை போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து சம்பந்தப்பட்ட 5 நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடும்படி ஆலந்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஷேக். இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் மேற்கண்ட 5 நபர்கள் மீதும் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

x