சம்பவம் 1:
சென்னை, வில்லிவாக்கம் சிட்கோ நகரைச் சேர்ந்த இளைஞர் ருத்ரா (26). இவர் பச்சையப்பன் கல்லூரியில் பிஎச்.டி கணிதம் படித்துவருகிறார். பகுதி நேரமாக கேட்டரிங் வேலையும் செய்துவருகிறார்.
இன்று அதிகாலையில் மேடவாக்கத்தில் கேட்டரிங் வேலையை முடித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார்.
பாடி மேம்பாலத்தின்கீழ் 100 அடி சாலையில் செல்லும்போது, அவரது பைக் பெட்ரோல் இல்லாமல் நின்றுவிட்டது. அதனால் பைக்கை தள்ளிக்கொண்டு சென்றுகொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த 3 பேர் வந்து ருத்ராவை வழிமறித்தனர். கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடமிருந்து செல்போனைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
சம்பவம் 2:
பரத் என்பவர், முகப்பேரில் தனது நண்பரின் திருமணத்தில் கலந்துகொண்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது பாடி மேம்பாலத்தின்கீழ் 100 அடி சாலையில் சென்றபோது ஒரு சிறுவன் லிஃப்ட் கேட்டுள்ளார். பரத் வாகனத்தை நிறுத்தியபோது, அங்கு மறைந்திருந்த 2 பேர் ஓடிவந்து கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர். பாலத்துக்கு அடியில் இழுத்துச்சென்று அவரைத் தாக்கியதுடன், அவரிடமிருந்து தங்க நகை, செல்போன் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இந்த 2 வழிப்பறிச் சம்பவங்கள் குறித்து, திருமங்கலம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 2 சம்பவங்களிலும் 6 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவுசெய்த போலீஸார், தப்பி ஓடிய கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர். மேலும், அருகில் உள்ள தெருக்களில் பதிவான சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்துவருகின்றனர்.