பெட்ரோல் பங்க் அதிபரிடம் ரூ.16 லட்சம் நூதன மோசடி


சென்னையில், பெட்ரோல் பங்க் அதிபரிடம் நூதன முறையில் ரூ.12 லட்சம் மோசடி செய்தவர்களைப் போலீஸார் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.

சென்னை, ஆவடி மிட்டனமல்லி பகுதியைச் சேர்ந்தவர் மோகன்(32). அதே பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்திவருகிறார். எம்ஆர்எப் டயர்ஸ் நிறுவனத்தில் விநியோகஸ்தராக வேண்டி சில மாதங்களுக்கு முன் அவர் விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து எம்ஆர்எப் நிறுவனத்திலிருந்து அனுப்புவதுபோல் அவருக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், ‘நீங்கள் எம்ஆர்எப் விநியோகஸ்தராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள். அதற்குப் பதிவுக் கட்டணமாக ரூ.4 லட்சம் செலுத்த வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பி மோகன் கடந்த ஜூலை மாதம் ரூ.4 லட்சத்தை வங்கி மூலம் செலுத்தியுள்ளார்.

அதைத் தொடர்ந்து முன்வைப்புத் தொகையாகப் பணம் அனுப்புமாறு மீண்டும் மின்னஞ்சல் வந்த நிலையில், 6 தவணைகளாக ரூ.12 லட்சத்தைச் செலுத்தியுள்ளார். எனினும், பணம் கேட்டு மீண்டும் மீண்டும் அவருக்கு மின்னஞ்சல்கள் வந்தன. இதனால் சந்தேகமடைந்த மோகன், எம்ஆர்எப் நிறுவனத்துக்கு நேரில் சென்று விசாரித்தார். தாங்கள் அது போன்று எந்த மின்னஞ்சலும் அனுப்பவில்லை என்றும், பணம் ஏதும் கட்டச் சொல்லவில்லை என்றும் எம்ஆர்எப் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மோகன், இதுகுறித்து முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x