புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த ஓட்டல் கடைக்காரர் ஒருவருக்கு அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்துரூ.1,000 மதிப்புள்ள பத்து தோசைக்கான ஆர்டர் செய்வதற்கு போனில் அழைப்பு வந்துள்ளது. முதலில் கடைக்காரர் மொத்த பணம் ஆயிரத்தை அனுப்புமாறு அந்த நபரிடம் கூறியுள்ளார்.
அதற்கு அந்த நபர் சோதனை செய்வதாக கூறி போன் பே மூலம் (Phone Pe) ரூ.1 அனுப்பி பணம் வந்து விட்டதா என கேட்டுள்ளார். அந்த கடைக்காரரும் தனது போன் பே மூலம் பார்த்து ரூ.1 வந்ததை உறுதி செய்து அவரிடம் கூறினார். பிறகு மீதி பணத்தை அனுப்புமாறு அந்த புதிய நபரிடம் கூறினார். அதன் பிறகு அந்த நபர், கடைக்காரருக்கு தோசைக்கான பணம் ரூ.10,000 வரவு வந்தது போல் ஒரு போலியான குறுஞ் செய்தி (SMS) அனுப்பியுள்ளார்.
பிறகு அந்த ஓட்டல் கடைக்காரருக்கு போன் செய்து நான் ரூ.1,000 அனுப்புவதற்கு பதிலாக ரூ.10,000 தவறுதலாக அனுப்பிவிட்டேன். அந்த மீதி பணத்தைதிருப்பி அனுப்புமாறு கேட்டுள்ளார். அந்த கடைக்காரரும் தனதுகணக்குக்கு பணம் வந்ததை உறுதி செய்யாமல், குறுஞ் செய்தி (SMS) வாக்கியத்தை மட்டும் நம்பி அந்த மோசடி நபருக்கு மீதி பணம் ரூ.9,000-ஐ அனுப்பி உள்ளார். சிறிது நேரம் கழித்து சந்தேகம் அடைந்த அந்த கடைக்காரர் தன்னுடைய வங்கிக் கணக்கை சோதனை செய்ததில் அவருக்கு அப்படி ஏதும் பணம் வரவில்லை என்பது தெரிந்தது.
இதையடுத்து இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை ஏற்று நிலைய அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். இணைய வழி குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் ஆய்வாளர்கள் தியாகராஜன், கீர்த்தி ஆகியோர் கூறுகையில்,"கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இது போன்ற ஐந்து புகார்கள் வந்துள்ளது புகார் தெரிவிக்க இலவச எண்: 1930 அல்லது www.cybercrime.gov.in அணுகலாம்" என்று தெரிவித்தனர்.