வேலூர்: திருடுபோன 250 செல்போன்கள் மீட்டு ஒப்படைப்பு - போலீஸாருக்கு பாராட்டு


வேலூரில் திருடுபோன செல்போனை அதன் உரிமையாளரிடம் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் மணிவண்ணன் ஒப்படைத்தார். உடன் கூடுதல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன், ஆய்வாளர் புனிதா மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் செல் ட்ராக்கர் மற்றும் மத்திய அரசின் சிஇஐஆர் இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட்ட புகார்களின் அடிப்படையில் ரூ.50.20 லட்சம் மதிப்புடைய 250 செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இன்று ஒப்படைத்தார்.

வேலூர் மாவட்டத்தில் காணாமல் போகும் அல்லது திருடப்படும் செல்போன்கள் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிப்பதற்கு வசதியாக செல் ட்ராக்கர் திட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய திட்டத்தில் 94862 14166 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு ‘Hi’ என்று குறுந்தகவல் அனுப்பினால், உடனடியாக அவர்களது கைபேசிக்கு ஒரு கூகுள் இணைப்பு அனுப்பி வைக்கப்படும். அந்த இணைப்பில் தங்களது பெயர், முகவரி, காணாமல் போன செல்போன் எண், ஐஎம்ஈஐ எண் போன்ற விவரங்களை பதிவிட்டால் அந்த தகவல் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸ் பிரிவுக்கு அனுப்பப்பட்டு காணாமல் போன செல்போன் கண்டறிந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் செல் ட்ராக்கர் வசதி மூலம் கடந்த மார்ச் மாதம் வரை ரூ.1 கோடியே 24 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலான 672 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, செல் ட்ராக்கர் மற்றும் மத்திய அரசின் சிஇஐஆர் தளத்தின் வழியாக பதிவு செய்யப்பட்ட புகார்களின் அடிப்படையில் ரூ.50.20 லட்சம் மதிப்பிலான மேலும் 250 செல்போன்கள் மீட்கப்பட்ட நிலையில் அவற்றை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இன்று அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "செல் ட்ராக்கர் மற்றும் சிஇஐஆர் தளத்தின் மூலம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் வேலூர் மாவட்ட காவல் துறை சார்பில் இதுவரை ஐந்து கட்டங்களாக ரூ.1 கோடியே 74 லட்சத்து 67 மதிப்புடைய 922 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் சிஇஐஆர் தளத்தில், தொலைந்துபோன செல்போன் குறித்து பதிவு செய்து காவல் நிலையத்தில் புகாராக பதிவு செய்துகொள்ளலாம்.

இந்த புகாரின் அடிப்படையில், பயன்பாட்டில் இருக்கும் அந்த செல்போனையும் அதில் உள்ள சிம் கார்டையும் உடனடியாக லாக் செய்து விட முடியும். தொடர்ந்து, வேறு சிம் கார்டை பயன்படுத்தினால் அதன் விவரம் காவல்துறைக்கு வந்துவிடும். அதைவைத்து அந்த செல்போன் மீட்கப்படும். வேலூர் மாவட்டத்தில் சிஇஐஆர் தளத்தின் மூலமாக 120 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன’’ என்றார்.

வேலூர் மாவட்டத்தில் காணாமல் செல்போன்களை கண்டுபிடித்து மீட்பதில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அப்போது, வேலூர் மாவட்ட சைபர் குற்றப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன், ஆய்வாளர் புனிதா, உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.