மதுரை: ‘நியோ மேக்ஸ்’ நிதி மோசடி வழக்கில் சிவகங்கையைச் சேர்ந்த முக்கிய நபரை பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் இன்று கைது செய்தனர்.
மதுரையை மையமாக கொண்டு ‘நியோ மேக்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனமும் மற்றும் அதன் துணை நிறுவனங்களும் செயல்பட்டன. இவற்றில் முதலீடு செய்தவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக கொடுத்த புகாரின் பேரில் மதுரை பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார், நியோ மேக்ஸ் நிர்வாக இயக்குநர்களான கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், திருச்சி வீரசக்தி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர் விசாரணையில், இந்நிறுவனம் பல நூறு கோடிக்கும் மேல் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இதனிடையே, பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு சிறப்பு டிஎஸ்பி-யான மணிஷா தலைமையிலான தனிப்படையினர் நியோ மேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துகளை பறிமுதல் செய்து, அவற்றை நீதிமன்றம் மூலமாக, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய நபர்களையும் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘க்ளைன் மேக்ஸ்’ கம்பெனியின் இயக்குநரான சிவகங்கை மாவட்டம், தமறாக்கி அருகிலுள்ள குமாரபட்டியைச் சேர்ந்த அய்யங்காளை மகன் சம்பத் (42) என்பவரை டிஎஸ்பி மணிஷா தலைமையிலான தனிப்படையினர் இன்று கைது செய்தனர். இவ்வழக்கின் முக்கிய நபரான இவரிடம், நிறுவனத் திற்கு சொந்தமான சில சொத்துகள் பற்றிய விவரங்களை சேகரித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.