செல்போன் கடை உரிமையாளரை கடத்தி ரூ.50 லட்சம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது @ சென்னை


சென்னை: செல்போன் கடை உரிமையாளரை கடத்தி ரூ.50 லட்சம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை ராயப்பேட்டை மீர் பக்‌ஷி அலித் தெருவை சேர்ந்தவர் ஜாவித் சைபுதீன்(32). இவர் பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி, மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். ஜாவித் சைபுதீன், முகம் தெரியாத இளம் பெண் ஒருவருடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் 17-ம் தேதி அந்த இளம் பெண், ஜாவித் சைபுதீனை, பட்டினப்பாக்கம் கற்பகம் அவென்யூ பகுதியில் உள்ள மதுபான கூடத்துக்கு விருந்துக்கு அழைத்துள்ளார். அழைப்பின் பேரில், ஜாவித்தும் அங்கு சென்றார். அப்போது, அங்கிருந்த 4 பேர் கொண்ட கும்பல், ஜாவித்தை காரில் கடத்தி சென்றது.

மதுரவாயல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அவரை அடைத்து மிரட்டி வந்த அந்த கும்பல், அவரிடம் இருந்து ரூ.50 லட்சம் பணத்தை பறித்து சென்றது. இதுகுறித்து ஜாவித் பட்டினப்பாக்கம் போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், ஜாவித் சைபுதீனிடம் இனிக்கும் குரலில் பேசி, அவரை விருந்து அழைப்பது போல் அழைத்து, கடத்தல் திட்டத்தை அரங்கேற்றியது வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த 26 வயது இளம் பெண் என்பதும், இந்த கடத்தல் திட்டத்துக்கு மூளையாக செயல்பட்டது சென்னை அண்ணாசாலையை சேர்ந்த தமீம் அன்சாரி என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து, கடத்தல் கும்பலை சேர்ந்த அம்பத்தூரை சேர்ந்த சக்திவேல், சஜி ஆகிய 2 பேர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த கார் டிரைவர் திருவல்லிக்கேணியை சேர்ந்த சீனிவாசனை (26) பட்டினப்பாக்கம் போலீஸார் கைது செய்தனர்.

x