வன்முறையை தூண்டும் கருத்துகளை பதிவிட்டதாக தஞ்சை மாவட்ட எஸ்டிபிஐ தலைவர் மீது வழக்குப் பதிவு


திருவிடைமருதூர்: சாதி, மதங்களுக்கு இடையில் வன்முறையைத் தூண்டும் விதமாக ஃபேஸ்புக் தளத்தில் கருத்துகளை பதிவிட்டதாக தஞ்சை மாவட்ட எஸ்டிபிஐ கட்சி தலைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவிடைமருதூர் வட்டம், திருமங்கலக்குடி, குறிச்சி மலை, பிரதானச் சாலையைச் சேர்ந்தவர் அமானுல்லா மகன் குலாம் உசேன் (38). இவர் எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சாவூர் மாவட்டத் தலைவராக உள்ளார். இந்நிலையில், இவர் கடந்த ஜன. 23-ம் தேதி தனது ஃபேஸ்புக் பதிவில், ‘கூர் தீட்டவில்லை என்றால் முனை மழுங்கிவிடும். அசாத்தியத்தை எதிர்க்கவில்லை என்றால் சத்தியம் புதைந்துவிடும். ஆயுதம் எடு, ஆணவம் சுடு, தீப்பந்தம் எடு, தீமையைச் சுடு, வாள் இல்லாத அரசியலும் ஜனநாயகமும் இனி எடுபடாது வாள் தான் உன் வாழ்வைத் தீர்மானிக்கும்’ எனப் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், சாதி - மத மோதலை தூண்டும் விதமாக சமூக வலைதளத்தில் கருத்துகளை பதிவிட்டதாகக் கூறி, குலாம் உசேன் மீது திருவிடைமருதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x