உ.சந்தானலெட்சுமி
பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக நடந்திருக்கும் பாலியல் கொடுமைகள் தொடர்பாக போலீஸ் தனது விசாரணையை துரிதப்படுத்தினாலும் தேர்தல் தகிப்பில் உரிய நீதி கிடைக்காமல் போய்விடுமோ என்று அஞ்சத் தோன்றுகிறது. அதேநேரம், பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களைத் தட்டிக்கேட்க ‘பாலியல் வன்முறைக்கு எதிரான முறையீட்டுக் குழு’ ஒன்று உருவாகி இருப்பது சற்றே ஆறுதலைத் தருகிறது.
முன்னாள் டிஜிபி-யும் முற்போக்கு எழுத்தாளருமான திலகவதி ஐபிஎஸ் தலைமையில் கைகோத்திருக்கும் இந்தக் குழுவில் சட்ட வல்லுநர்கள், உளவியல் நிபுணர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் பிரதானமாக இடம் பிடித்திருக்கிறார்கள். இந்தக் குழு என்ன செய்யப் போகிறது என்பதை அறிவதற்காக திலகவதியைச் சந்தித்துப் பேசினேன்.
“குடும்பங்களில் பாலின சமத்துவமும், சமூகத்தில் பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வும் இல்லாததே பொள்ளாச்சி சம்பவம் போன்ற பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிகழ முக்கியக் காரணம்” என்று ஆரம்பமே அதிரடியாய் பேசினார் திலகவதி.