தாம்பரம் | கார் மாத தவணை கட்ட தாமதம்: கடன் வாங்கியவரை தாக்கிய பைனான்ஸ் நிறுவன ஊழியர் கைது


தாம்பரம்: தாம்பரத்தை அடுத்த சேலையூரை சேர்ந்தவர் ஆனந்தன் (43). இவர் எர்த் மூவர்ஸ் நிறுவனம் நடத்தி பொக்லைன் மற்றும் ஜேசிபி இயந்திரங்களை வைத்து தொழில் செய்து வருகிறார். தமிழ்நாடு கட்டுமான இயந்திரங்கள் உரிமையாளர்கள் சங்கத்தில் உறுப்பினராகவும் உள்ளார். இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று கார் வாங்கியுள்ளார்.

23 மாத தவணைகளில் 18 மாதங்கள் தவணைத் தொகையை முறையாக கட்டி உள்ளார். இந்த மாத தவணைத் தொகை கட்ட 12 நாட்கள் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு மாத தவணை கட்டவில்லை என வீட்டுக்கு வந்த பைனான்ஸ் நிறுவன ஊழியர் ஆனந்தனை தாக்கியுள்ளார்.

இதில் ஆனந்தனின் காது ஜவ்வு விழுந்த நிலையில் இதுகுறித்து சேலையூர் காவல் நிலையத்தில், ஆனந்தன் புகார் அளித்தார். ஆனால் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் ஆனந்தனுக்கு ஆதரவாக தமிழ்நாடு கட்டுமான இயந்திர உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று முன்தினம் தாம்பரத்தில் உள்ள நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.

இந்நிலையில் நேற்று அகரம் தென்னை சேர்ந்த நிதி நிறுவன ஊழியர் மனோஜ் குமார் (24) என்பவர் மீது கையால் தாக்குதல், ஆபாசமாக பேசுதல், சாவியை கொண்டு முகத்தில் காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழே வழக்கு பதிவு செய்து சேலையூர் போலீஸார், அவரை கைது செய்தனர்.