வாட்ஸ் அப் குழு மூலம் லாட்டரி விற்ற கும்பல் கைது @ கோவை


கோவை: கோவை துடியலூர் சரவணம்பட்டி பகுதியில் வாட்ஸ் அப் குழு மூலம் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோவை துடியலூர் சரவணம்பட்டி பகுதியில் ஒரு கும்பல், வாட்ஸ் அப் வாயிலாகவும், நேரடியாகவும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துவருவதாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தன. அதன் பேரில், தனிப்படை போலீஸார், மேற்கண்ட பகுதியில் கடந்த சில நாட்களாக ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று (மே 30) துடியலூர் - சரவணம்பட்டி சாலையில், வெள்ளக்கிணறு பிரிவு அருகே, 4 பேர் கொண்ட கும்பல் தனிப்படை போலீஸாரிடம் சிக்கனர். அவர்களைப் பிடித்து விசாரித்த போது, அவர்கள் லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் எனத் தெரிந்தது.

தொடர் விசாரணையில், பிடிபட்ட நபர்கள், ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் (39), வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த சதீஷ் குமார் (39), ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்த பிரதீப் (34), நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த ஆதீஷ் கண்ணன் (28) எனத் தெரிந்தது. பிடிபட்ட நாக்கு பேரையும் தனிப்படை போலீஸார், துடியலூர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். துடியலூர் போலீஸார் நால்வரையும் நேற்று (மே 30) இரவு கைது செய்தனர்.

இது குறித்து துடியலூர் காவல்துறையினர் கூறியதாவது: “வினோத் குமாரும் தலைமறைவாக உள்ள பிரபுவும் தான் இந்தக் கும்பலுக்கு தலைவர்கள். இவர்கள் வாட்ஸ் அப் வாயிலாக கேரளா மற்றும் நாகலாந்து லாட்டரி விற்று வந்துள்ளனர். ஒரு ஏரியாவுக்கு ஒரு குழு என கிட்டத் தட்ட 92 வாட்ஸ் அப் குழுக்களை வைத்துள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் ஒரு ஏஜென்ட் உள்ளார். ஒவ்வொரு குழுவிலும் ஏராளமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். லாட்டரி சீட்டுகளின் கடைசி 3 டிஜிட், கடைசி 4 டிஜிட் எண்களை குழுவில் பதிவிடுவர். அதை ஓகே எனக் குறிப்பிட்டு பதிவிட்டால் அந்த சீட்டை வாங்கிக் கொள்வதாக அர்த்தம்.

தொடர்ந்து அதற்கான கட்டணத்தை ஜிபே மூலம் பெற்றுக் கொள்வர். பின்னர், இவர்கள் தினசரி 1 மணி, 3 மணி, 6 மணி, 8 மணி என நான்கு நேரங்களில் லாட்டரி சீட்டுகளின் முடிவுகளை தெரிவிப்பர். அதில் பரிசு விழுந்திருந்தால், அதை உரியவர்களிடம் அளித்து விடுவர். தனிப்படை போலீஸாரின் தீவிர கண்காணிப்புக்கு பிறகு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.1.61 லட்சம் பணம், ஒரு கார், 5 லேப் டாப்கள், 9 செல்போன்கள், 96 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி பிரபுவின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.18 லட்சம் முடக்கப்பட்டுள்ளது. பிரபுவை தேடி வருகிறோம்” என கூறினர்.

x