மதுரை: பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கார் ஓட்டியதாக பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த யூடியூபர் டிடிஎஃப் வாசன், சென்னையில் வசிக்கிறார். கடந்த ஆண்டு காஞ்சிபுரம் அருகே பைக்கில் வீலிங் செய்தபோது நேரிட்ட விபத்தில் அவரது வலது கை முறிந்தது. அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அவரது ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், மதுரை பாண்டி கோயில் அருகே மஸ்தான்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் கடந்த 15-ம் தேதி இரவு காரில் சென்றபோது, அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும், மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலும் செல்போனில் பேசியபடி காரை ஓட்டியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மதுரை மாநகரஆயுதப்படை எஸ்.ஐ. மணிபாரதி, அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில்டிடிஎஃப் வாசன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சென்னைசென்ற போலீஸார் அவரை மதுரைக்கு அழைத்து வந்து,காவல் நிலையத்தில் விசாரித்தனர். அவர் பழகுநர் உரிமம் (எல்எல்ஆர்) பெற்று கார் ஓட்டியதும் தெரிந்தது. தொடர்ந்து அவரைபோலீஸார் கைது செய்தனர்.
இதற்கிடையே, டிடிஎஃப் வாசன்சார்பில் ஜாமீன் கோரி தாக்கலான மனு மதுரை 6-வது நீதித்துறை நடுவர் சுப்புலட்சுமி முன்னிலையில் நேற்று மதியம் விசாரணைக்கு வந்தது. விதிமீறல் செய்ததற்கு வருத்தம் தெரிவித்தும், இனிமேல் இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடமாட்டேன் என்றும் தெரிவித்த டிடிஎஃப் வாசனுக்கு, நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.