சூடு பிடிக்கும் ‘குட்கா’ கைதுகள்... அடுத்த குறி யார்?- தமிழக அரசுக்கு டெல்லி வைக்கும் செக்!


டி.எல்.சஞ்சீவிகுமார்

குட்கா வழக்கு வேகம் எடுத்துள்ளது. காரணம் மத்திய அரசின் அரசியல் காய் நகர்த்தல்கள்தான். ஆனால், அப்படியிருந்தாலும் இந்தச் சட்ட நடவடிக்கைகள் அவசியம். ஏனெனில் குட்கா விவகாரம் என்பது வெறும் ஊழல் தொடர்புடைய குற்றம் மட்டுமல்ல; அது தடை செய்யப்பட்ட போதைப் பொருளை விநியோகித்து லட்சக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாடிய பெரும் குற்றமும்கூட. ஆகவே, தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் மட்டுமல்லாமல் குற்றத்தில் தொடர்புடைய மேல் மட்ட நபர்கள் வரை கைது செய்யப்படுவார்களா என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. சரி, இந்த ரெய்டுகள் குற்றவாளிகள் கைது வரைக்கும் போகுமா, அதற்கான சட்டபூர்வ சாத்தியங்கள் இருக்கின்றனவா? பார்ப்போம்!

‘பெரிய’ மனிதர்கள் கைது எப்போது?

அரசியல் காய் நகர்த்தல் என்பதால் மாநில அரசு சார்பில் எதையாவது சரிக்கட்டப் பார்ப்பார்கள். இதை எல்லாம் தாண்டி இந்த ‘பெரிய’ மனிதர்களைக் கைது செய்ய சட்டப்படி முகாந்திரங்கள் இருக்கின்றனவா என்றால் நிச்சயம் இருக்கிறது, நிறைய இருக்கிறது. எப்படி? இந்த வழக்கில் தற்போது சிபிஐ-யால் கைது செய்யப்பட்டுள்ள குட்கா வியாபாரிகள் மாதவ ராவ், சீனிவாச ராவ், உமாசங்கர் மற்றும் அரசு ஊழியர்களான மத்திய கலால் துறை கண்காணிப்பாளர் என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி செந்தில் முருகன் ஆகியோரை இரு பிரிவாக பிரிக்கலாம். ஒன்று, லஞ்சம் கொடுத்தவர்கள். இரண்டாவது, அதை வாங்கி விநியோகித்தவர்கள்.

x