தாம்பரம்: தாம்பரத்தை அடுத்த சேலையூரில் 11 மாத பெண் குழந்தை, வாளி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரத்தை அடுத்த சேலையூர், மகாலட்சுமி நகர், முத்தமிழ் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் (27). இவர் அதே பகுதியில் உள்ள ஸ்டிக்கர் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உமாதேவி (26), இல்லத்தரசி. இவர்களுக்கு அர்ச்சனா என்ற 11 மாத பெண் குழந்தை இருந்தது.
இந்நிலையில், அதிக வெப்பம் காரணமாகவும் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாலும் நேற்று இரவு சுமார் 11:30 மணியளவில் இவர்களது வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு தரையில் குழந்தையுடன் கணவன், மனைவி இருவரும் படுத்தி தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை சுமார் 1: 30 தூக்கத்தில் இருந்து எழுந்த குழந்தை அர்ச்சனா வீட்டின் முன்பகுதியில் தண்ணீருடன் இருந்த வாளியில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தாள்.
தலைகுப்புற விழுந்ததால் குழந்தையால் சத்தம் போடமுடியவில்லை. இதனிடையே, கணவனும் மனைவியும் எழுந்து பார்த்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைக் காணாது தேடினர். அப்போது வீட்டின் வாசலில் இருந்த வாளி தண்ணீரில் குழந்தை மூழ்கி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து இருவரும் கதறி துடித்தனர்.
உடனடியாக குழந்தையை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கே குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலையூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாளி தண்ணீரில் 11 மாத குழந்தை விழுந்து பலியான சம்பவம் சேலையூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.