இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் @ தூத்துக்குடி


பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ் உள்ளிட்ட போலீசார் தூத்துக்குடி பகுதியில் நேற்று நள்ளிரவு 12.15 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடற்கரைக்கு செல்லும் உப்பள பாதையில் வந்த சரக்கு வேனை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர்.அப்போது அந்த வேனில் பீடி இலை மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. வேனில் இருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். இந்தப் பீடி இலை மூட்டைகளை அவர்கள் படகு மூலம் இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து வேனில் தலா 30 கிலோ எடை கொண்ட 62 மூட்டைகளில் இருந்த 1,860 கிலோ பீடி இலைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.30 லட்சமாகும். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேனும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கியூ பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x