வருமான வரி சோதனையும்... பின்னணியில் நடக்கும் திக் திக் அரசியல் நகர்வுகளும்!


தமிழகத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனைகள் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கின்றன. கடந்த காலங்களில் சசிகலா குடும்பத்துக்கு எதிராக வருமான வரி சோதனை என்கிற சாட்டையைச் சுழற்றிய பாஜக, இம்முறை சாட்டையைச் சுழற்றியிருப்பது அதிமுக முக்கியத் தலைகளுக்கு எதிராக என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில். இதையொட்டி சோதனைக்கு முந்தைய நாட்களிலும் சோதனை நடந்த நாட்களிலும் நடந்த திக்... திக்... அரசியல் நகர்வுகளை வட்டாரத்துப் புள்ளிகள் சிலர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள்.

“தமிழகத்தில் இப்போது நடப்பது ஆடு - புலி ஆட்டம். ஆட்டின் இடத்திலிருக்கிறது மாநில அரசு. புலியின் இடத்திலிருக்கிறது மத்திய அரசு. எப்படியாவது ஆட்டை அமுக்கி தன் பயப் பிடிக்குள் வைத்திருக்க வேண்டும் என்பது புலியின் திட்டம். அதற்காகத் தன்னால் முடிந்த வரை சாம, பேத, தான, தண்ட வழிகளில் எல்லாம் புகுந்து ஆட்டம் காட்டுகிறது ஆடு. அதை அடிக்க புலி எடுத்திருக்கும் அஸ்திரங்களில் ஒன்றுதான் வருமான வரித்துறை சோதனை. இதை, ஆட்சியாளர்களைப் பயமுறுத்துவதற்காக மட்டுமில்லாமல் அவர்கள் மீது மக்கள் மனதில் அதிருப்தியையும் வெறுப்பையும் அதிகரிக்கச் செய்யும் உத்தியாகவே பாஜக பயன்படுத்திக்கொள்கிறது.

இதை முன்னிறுத்தும் பொருட்டே, ஜூலை 9-ல் சென்னை வந்த அமித்ஷா, `இந்தியாவிலேயே ஊழல் நிறைந்த மாநிலமாக இருக்கிறது தமிழகம். தமிழகத்தில் ஊழலற்ற கூட்டணியை பாஜக அமைக்கும்...’ என்றார். பாஜக-வின் அத்தனை திட்டங்களுக்கும் ஆமாம் சாமி போட்டுவந்த அதிமுக-வுக்கு அமித்ஷாவின் பேச்சு கோபத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ‘பதிலடி கொடுக்கலாமா, அமைதியாக விட்டு விடலாமா?’ என்று நிர்வாகிகள் சிலருடன் அதிமுக தலைமை ஆலோசித்தது. முதல்வர் தரப்பாகப் பேசிய கொங்கு மண்டல அமைச்சர்கள், `அமைதியாக விட்டுவிடலாம்’ என்றார்களாம். மற்றொரு தரப்போ, `அமைதியாக இருந்தால் ஊழல்வாதிகள் என்று நாமே ஒப்புக்கொண்டதாக ஆகாதா? ’ என்று கொளுத்திப் போட்டிருக்கிறது.

அடுத்த சில மணி நேரங்களிலேயே மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, `வங்கிகளில் மக்கள் பணத்தை சூறையாடிய நீரவ் மோடி, மல்லையா போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத பாஜக தமிழகத்தில் ஊழல் என்று கூறுவதை ஏற்க முடியாது...’ என்றார். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் பாஜக-வின் மாநிலத் தலைவர்கள் பதிலுக்கு பதில் பதிலடி கொடுக்க... அமைச்சர் ஜெயக்குமார் ஒருபடி மேலே சென்று, `பாஜக தேவையற்ற பேச்சுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். எங்கள் ஆட்கள் கிளர்ந்து எழுந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும்’ என்று எச்சரித்தார். இது நடந்தது ஜூலை 15-ம் தேதி.

x