அந்த 24 நாட்கள்..!- பழநி கருவறை பூட்டப்பட்டது ஏன்?


‘பகலில் எந்நாளும் நடை சாத்தப்படாத பழநி மலைக்கோயில் கருவறை, 2002-ல், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தொடர்ச்சியாக 24 நாட்கள் மூடிக் கிடந்தது ஏன்?, அப்போது நடந்த சதி என்ன?, அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபாலைக் காப்பாற்ற அரசியல்வாதிகள் முயல்வது ஏன்?’ இப்படி ஏகப்பட்ட கேள்விகளுடன் விசாரணையை நகர்த்தி வருகிறார்கள் தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார்!

தமிழகப் பெருங்கோயில்களில் ‘வருமானத்தில்’ முதலிடத்தில் இருப்பது பழநி கோயில் என்று அமைச்சர்களும், அறநிலையத்துறை அதிகாரிகளும் அடிக்கடி சொல்வது வழக்கம். இத்தனை காலமாக அவர்கள் உண்டியல் வருமானத்தைத்தான் சொல்கிறார்கள் என்று தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். மூலவர் சிலை செய்ததிலேயே கோடிகளைக் குவித்திருப்பதும், நவபாஷாண சிலையையே வெளிநாட்டுக்குக் கடத்தத் திட்டமிட்டிருந்ததும் இப்போது வெளிவந்திருக்கிறது.

இதுபற்றிய விசாரணைக்காக நாம் பழநிக்குச் சென்றது கிரிவல நாளில் என்பதால், லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தார்கள். “சாமி விக்ரகதே சொர்ண விக்ரகம்னு பரைஞ்சு, வெங்கல விக்ரகம் வெச்சுபடிச்சு. இ எந்துரு நாடு?” (சாமி சிலையிலேயே தங்கம்னு சொல்லி வெங்கலச் சிலைய வெச்சிட்டாங்களாம். இது என்னய்யா நாடு) என்று ஒரு கேரள பக்தர் கேட்டது, நம் முகத்தில் துப்பியதைப் போல அவமானமாக இருந்தது. உண்மைதான், உலகப் புகழ்பெற்ற கோயிலின் கருவறைக்குள், தனிநபரின் சுயநலத்துக்காக மூலவரையே மறைத்து இன்னொரு மூலவர் சிலை வைப்பது கேரளத்திலோ, வேறு எந்த மாநிலத்திலோ சாத்தியமா? ஆன்மிகத்தின் அடிப்படையே நம்பிக்கைதான். அதையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்கள் அறநிலையத்துறை அதிகாரிகள்.

பழநி கோயில் சிலை முறைகேடு வழக்கில், அறநிலையத்துறை ஸ்தபதி முத்தையா, முன்னாள் இணை ஆணையர் கே.கே.ராஜா, அப்போதைய கோயில் உதவி ஆணையர் புகழேந்தி,அறநிலையத்துறை தலைமையக நகை சரிபார்ப்பாளர் தெய்வேந்திரன் ஆகிய 4 பேரைக் கைது செய்திருக்கிறது சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ்.

x