மும்பையின் நிழல் உலக தாதாக்கள் பற்றிய குலைநடுக்கச் செய்திகள் அடிக்கடிஅங்கே திரைப்படமாகும்; சக்கைப்போடு போடும். தொடர் குண்டு வெடிப்புச்சம்பவத்துக்குப் பிறகு, தாவூத் இப்ராகிம் ‘உலகப் புகழ்’ பெற்றாலும், குட்டி சைத்தான்களாக எக்கச்சக்க குழுக்கள் அங்கே மிரட்டல், ஆள்கடத்தல், படுகொலை என்றுபரபரப்பாக இயங்கிக்கொண்டே இருக்கும். அப்படி ஒரு குட்டி சைத்தான் சோட்டாராஜனை மையம் கொண்ட பத்திரிக்கையாளர் ஜே டே கொலை வழக்கு, திரைப்படங்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் மர்ம திருப்பங்கள் கொண்டது. அந்த வழக்கில் இப்போது தீர்ப்பு வந்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்துள்ளது.
மகாராஷ்டிரத்தின் பிரபல ஆங்கில நாளிதழ் ‘மிட்-டே’! இதில் க்ரைம் நிருபராகப்பணியாற்றிவந்த ஜோதிர்மய் டே (சுருக்கமாக ஜே டே)... 2011, ஜூன் 11-ம் தேதிபணி முடிந்து பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் அவரைச் சுட்டுத் தள்ளிவிட்டுப் பறந்தார்கள். பெரும் பீதியைக் கிளப்பியஇந்த நடுரோட்டுப் படுகொலை, மும்பை பத்திரிகையாளர் போராட்டமாகவும் வெடித்தது. அடுத்தடுத்து 13 பேர் இந்தக் கொலை வழக்கில் கைதானார்கள். மகாராஷ்டிரத்தின் சிறப்புப் பிரிவு போலீஸாரிடம் வழக்கின் விசாரணை ஒப்படைக்கப்பட்டது. பிறகு வழக்கு சிபிஐ கைக்குப் போனது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நிழல் உலகக் கும்பலைப் பற்றித் தொடர்ந்து புலனாய்வு செய்து கட்டுரைகள் எழுதியதோடு, இரண்டு புத்தகங்களும் வெளியிட்டிருந்தார் ஜே டே. அதில், ‘கல்லாஸ்’ (காலி, முடிஞ்சு போச்சு என்று பொருள்!) என்ற புத்தகம் தாதாக்களின் கோபத்தை ரொம்பவே கிளறியிருந்தது. அது போதாமல், மூன்றாவதாகவும் ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருந்தார் ஜே டே. அதில் பிரபல தாதா சோட்டா ராஜன் பற்றிப் பகீர் தகவல்களை அவர் சொல்வதாக இருந்தார். விசாரணையில் கிடைத்த விவரங்கள், இந்தப் புத்தகப் பின்னணி எல்லாவற்றையும் வைத்து, சோட்டா ராஜன்தான் இந்தக் கொலையின் மூளை என்று அறிவித்தது போலீஸ்.
சற்றும் எதிர்பாராத திருப்பமாக, இதில் ஒரு புதுக் கிளைக் கதையும் முளைத்தது. ‘தொழில் போட்டியும் கொலைக்கு ஒரு காரணம்’ என்று சொல்லி, மூன்று பத்திரிகையாளர்களைக் கைதுசெய்தார்கள். அதில், ஒருவர் வழக்கின் விசாரணை நடந்துகொண்டிருந்தபோதே இறந்துவிட்டார். மற்ற இருவரும் தற்போதைய தீர்ப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில் ஜிக்னா வோரா என்ற பெண் பத்திரிகையாளரைத்தான் ‘சோட்டா ராஜனுடன் சேர்ந்து கொலைக்குத் திட்டமிட்ட முக்கிய கூட்டாளி’ என்று வழக்குச் சொன்னது.