கோடிகளைத் தின்ற குட்கா… பதுங்குமா... பாயுமா... சிபிஐ?


குட்கா ஊழல் வழக்கு ‘தற்காலிகமாக’ உச்சம் தொட்டிருக்கிறது. நாட்டில் நிலவும் அரசியல் சூழலின் அடிப்படையில் இங்கே நிகழ்பவை எல்லாமே தற்காலிகம்தான். நாளை எதுவும் எப்படியும் மாறலாம். ஊழல் வழக்குத் தொடங்கி கொலை வழக்கு வரை எதுவுமே சட்டத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதில்லை. அதிகாரத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன. குட்கா வழக்கும் சிபிஐ கையாண்ட ஏனைய சில வழக்குகளைப் போல நீர்த்துப்போகக் கூடாது என்பதற்காகவே, இதை எழுத வேண்டியிருக்கிறது. இந்த ஊழல் வழக்கின் ஆரம்பத்தையே எடுத்துக்கொள்வோம்.

இன்றைக்கு வேண்டுமானால், குட்கா வழக்கை உயர் நீதிமன்றம் சிபிஐ-க்குமாற்றியிருக்கலாம். ஆனால், 2014-ல், முதன் முதலில் இதுகுறித்துப் புகார் கடிதம் சென்றது சிபிஐ-க்குத்தான். சென்னை மாதவரத்தில் இயங்கிவரும் ஒரு கிடங்கில் தடை செய்யப்பட்ட குட்கா வணிகம் மூலம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்யப்படுவதாகவும், இதற்காக உயர் அதிகாரிகள் பலரும் லஞ்சம் பெறுவதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. அதுவரை குட்கா விவகாரம் குறித்து மூச்சு பேச்சில்லை.

ஆனால், அப்போது சிபிஐ பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. தமிழகம், கேரளம், புதுச்சேரி என மூன்று மாநிலங்களின் வழக்குகளையும் கவனிக்க வேண்டிய சென்னை மண்டல சிபிஐ-க்கு இந்த வழக்குக் கூடுதல் சுமையாகத் தோன்றியிருக்கலாம். அதனால், இதை மாநில அரசிடம் தள்ளிவிடுவதிலேயே குறியாக இருந்தது. 2015-ம் ஆண்டே இது தொடர்பான விசாரணையை முடித்த சிபிஐ, ‘குட்காவை தடை செய்தது தமிழக அரசுதான். எனவே , புகார் மனுவையும் விசாரணை அறிக்கையையும் தமிழகக் காவல் துறைக்கு அனுப்புகிறோம்’ என்று குறிப்பிட்டு அன்றைய சென்னை காவல் துறை ஆணையரான ஜார்ஜுக்கு ஆவணங்களைத் தள்ளிவிட்டது.

இந்த வாய்ப்பைக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள் அன்றைய ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள். 2014 ஜூன் 7-ம் தேதி, மாதவரம் கிடங்குக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. அங்கு கைப்பற்றப்பட்ட குட்கா, மாவா பொருட்களின் மாதிரி, மாநில அரசின் உணவுப் பாதுகாப்புப் பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பப்பட்டது. போதை பொருட்களை விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

x