1999-ல், மதுபான விடுதியின் பணிப்பெண் ஜெசிகா லால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் டெல்லியையே உலுக்கியது. சம்பவம் நடந்து 11 வருடங்களுக்கு பின் முடிவுக்கு வந்த இந்த வழக்கில், முக்கியக் குற்றவாளியான மனு சர்மாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் பிறகு பாலிவுட் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு தள்ளியது. தற்போது, மனு சர்மாவின் தண்டனைக் காலம் முடிவடையும் நிலையில் மீண்டும் பரபரப்பு கிளம்பியுள்ளது. காரணம், மனு சர்மாவை மன்னிக்க முன்வந்துள்ள ஜெசிகா லாலின் சகோதரி சபரீனா லால்!
டெல்லியின் தென்பகுதியான மெஹ்ரோலியின் ஒரு ஹோட்டலில் கடந்த ஏப்ரல் 30, 1999-ல் நடந்த சம்பவம் அது. இங்குள்ள மதுபான விடுதியில் இளம்பெண் ஜெசிகா லால் பரிமாறும் பணியில் இருந்தார். அன்று நடந்த விஐபி விருந்தில், மதுபானங்கள் தீர்ந்த பின்பும், அதைக் கேட்டு மூன்று இளைஞர்கள் தகராறு செய்தனர். அவர்களிடம், ‘மது இல்லை’ என உறுதியாக மறுத்தார் ஜெசிகா லால். இதனால் கோபமடைந்த மூவரில் ஒருவர், தன் இடுப்பில் செருகியிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து வானத்தில் ஒரு முறை சுட்டுவிட்டு, அடுத்த குண்டை ஜெசிகாவின் நெற்றியில் பாய்ச்சினார். அதே இடத்தில் துடிதுடித்து மடிந்தார் ஜெசிகா லால்.
பரபரப்பாகப் பேசப்பட்ட இந்தக் கொலை தொடர்பாக ஹரியானாவின் அப்போதைய மாநில அமைச்சர் வினோத் சர்மாவின் மகன் சித்தார்த் வசிஷ்ட் என்கிற மனு சர்மா, உபியின் முன்னாள் எம்பியான டி.பி.யாதவின் மகன் விஷால் யாதவ், மற்றும் அமர்தீப் சிங் கில் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், ஜெசிகா சுடப்பட்டபோது டெல்லியின் முந்நூறுக்கும் மேற்பட்ட முக்கியப் பிரமுகர்கள் சம்பவ இடத்தில் இருந்தும், ‘குற்றவாளிகளுக்கு எதிரான சாட்சிகள் இல்லை’ என அனைவரும் தப்பவிடப்பட்டனர். இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் கிளப்பியது. இதன் பிறகு மீடியா எழுப்பிய கேள்விகளால் அந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற மேல்முறையீட்டில் மீண்டும் உயிர்பெற்று, குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்தது.
இதில், விஷால் யாதவும் அமர்தீப் சிங் கில்லும் நான்கு வருட தண்டனைக்குப் பின் விடுதலையாகினர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மனு சர்மாவும் அதில் 15 வருடங்களைக் கழித்துவிட்டார். நன்னடத்தை காரணமாக மனு சர்மா கடந்த வருடம் அக்டோபரிலிருந்து அன்றாடம் திஹார் சிறையில் இருந்து வெளியில் சென்று பணியாற்றித் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் அடிப்படையில் அவரை விடுதலை செய்ய திஹார் நிர்வாகம் பரிசீலனை செய்து வருகிறது. அதற்கு முன்பாக, மனு சர்மாவை விடுதலை செய்ய ஆட்சேபனை ஏதும் உள்ளதா? எனக் கேட்டு ஜெசிகா லாலின் சகோதரியான சபரீனா லாலுக்கு கடிதம் எழுதினார் திஹார் சிறை அதிகாரி. அதற்கு சபரீனா லால் எழுதிய பதில்தான் ஜெசிகா லால் வழக்கை மீண்டும் நினைவுகூரச் செய்துள்ளது. இது குறித்து ‘காமதேனு’விடம் பேசினார் சபரீனா லால்.