தமிழக உயர் கல்வித்துறையில் மூடிக்கிடந்த சாக்கடை மூடியொன்று திறந்து, அசுத்தம் சாலையில் பாய்ந்திருக்கிறது. உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளின் எதிர்காலம் கருதிச் சொன்ன ‘அறிவுரைகள்’ ஆளுநர் மாளிகை வரை எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. பெண்கள், தங்கள் ஆண் நண்பர்களுடன் பழகும்போது ‘பாதுகாப்பாக’ இருக்க வேண்டும் என்று ஒரு நடிகை சொன்னதற்கே கொந்தளித்தது தமிழகம். இப்போது ஒரு பேராசிரியையே தவறான பாலியல் தொடர்புகளால் மாணவிகள் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்று பாடம் நடத்தியிருப்பதைக் கண்டு விக்கித்து நிற்கிறது.
கடந்த 20 ஆண்டுகளாகத் துணைவேந்தர் பணி நியமனங்கள் ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலாளர் நியமனம்போல மாறிப்போயிருக்கின்றன. ஐம்பது கோடி ரூபாய் முதலீடு செய்தால், 500 கோடியை அறுவடை செய்யலாம் என்கிற தொழில் யுத்தியே இந்தப் பிரச்சினையின் ஆணிவேர். கற்பித்தல், விரிவாக்கம், ஆராய்ச்சி எதைப்பற்றியும் கவலையின்றி பண வேட்டையில் இறங்கிய உயர் அதிகாரிகளுக்கு ஈடுகொடுக்க வேண்டிய சூழலுக்குப் பேராசிரியர்கள் தள்ளப்பட்டார்கள். ஆசிரியருக்கான அறம் பின்தள்ளப்பட்டது. தவறுகளைத் தட்டிக்கேட்ட ஆசிரியர்கள் கட்டம் கட்டப்பட்டார்கள். பெரும்பாலான உயர் கல்விநிறுவனங்கள் அயோக்கியர்களின் கூடாரமாக வளர்த்தெடுக்கப்பட்டதன் விளைவே இன்றைய இழிநிலை.
முதலிடத்தில் காமராசர் பல்கலைக்கழகம்!
தமிழகத்தின் மிக மோசமான பல்கலைக்கழகம் பட்டியலில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருக்கிறது மதுரை காமராசர் பல்கலைக்கழகம். கல்லூரிகளைத் தர நிர்ணயம் செய்வதற்காக மத்திய குழு (நாக்) வருகையில் அவர்களைக் குஷிப்படுத்த ஆடம்பர விடுதியில் அறை, உயர்தர உணவு, மது, சுற்றுலா என்று கவனிப்பது இந்தப் பல்கலையின் கீழ் வரும் பெரும்பாலான கல்லூரிகளுக்கு வாடிக்கையான ஒன்று. சில சபல புத்திக்காரர்களுக்குப் பெண்களை ஏற்பாடு செய்வதும் உண்டு என்கிறார்கள். அப்படியொரு புகாரில் பழநியில் உள்ள முக்கியமான கல்லூரியே சிக்கியது.