சரியும் இரு மெகா பிம்பங்கள்!- ஷிகா சர்மா.. சாந்தா கொச்சார்…


பொதுவாக ஒரு நிறுவனத்தின் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் பதவி விலகுகிறார்கள் என்ற செய்தி வெளியானால், அந்நிறுவனத்தின் உள்விவகாரங்கள் பற்றி கவலையான தகவல்கள் பரவி, அதன் விளைவாக பங்கு விலைகள் மளமளவெனச் சரியும். ஆனால், இந்த ஆண்டு டிசம்பரில் ‘பதவி விலகுகிறேன்’ என்று அந்த மெகா பதவி அதிகாரி அறிவித்தவுடன், அந்நிறுவனத்தின் பங்குகள் விலை 5.6 சதவீத அளவுக்கு பங்குச் சந்தையில் உயர்ந்தன! இதில் கவனிக்க வேண்டிய இன்னொன்று, கடந்த ஐந்து மாதமாகவே அந்நிறுவன பங்குகள் தொடர் சரிவை சந்தித்துக் கொண்டிருந்தன என்பதே.

அந்த நிறுவனம் – ஆக்சிஸ் வங்கி. விலகுவதாக அறிவித்தவர் அதன் தலைமைச் செயல் அதிகாரி ஷிகா சர்மா.

அதேபோல், குடியரசுத் தலைவர் பங்கேற்ற தொழில்துறை கூட்டமைப்பான ஃபிக்கி நிகழ்ச்சி. அதன் தலைமை விருந்தினராக பங்கேற்று ராம்நாத் கோவிந்திடமிருந்து இன்னொரு மெகா அதிகாரி விருது பெறுவதாக ஏற்பாடு. ஆனால், கடைசி நேரத்தில் அந்நிகழ்ச்சியில் அதிகாரி பங்கேற்கவில்லை. சொந்தக் காரணங்கள் என்று கூறப்பட்டாலும், இவ்விழாவில் பங்கேற்பது சரியாக இருக்காது என விழா அமைப்பாளரே சொல்லிவிட்டதாகவும் தகவல். அந்த அதிகாரி - ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சாந்தா கொச்சார்.

இந்த இரு பெண் ஆளுமைகளுக்குமே பொதுவில் ஓர் ஒற்றுமை உண்டு. இருவருமே ஐசிஐசிஐ வங்கியில்தான் தங்களது வங்கிப் பணியைத் தொடங்கினார்கள். இருவருமே தங்கள் திறமையால் மளமளவென உயர்ந்தார்கள். உச்ச தலைமைப் பொறுப்புக்கு போட்டி வந்தபோது, அந்த பதவி சாந்தா கொச்சார் வசம் சென்றது. இதையடுத்து 2009-ம் ஆண்டு ஆக்சிஸ் வங்கியின் தலைமைப் பொறுப்பை கம்பீரமாக ஏற்றார் ஷிகா சர்மா.

x