சென்னை: சென்னையில் சிறுமிகளை வஞ்சித்து பாலியலில் தொழிலில் தள்ளி பணம் சம்பாதித்த வழக்கில் அடுத்தடுத்து கைது நடவடிக்கை தொடர்கிறது.
இது குறித்து பாலியல் தடுப்பு பிரிவு போலீஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்: சென்னையில் சில தினங்களுக்கு முன் வளசரவாக்கம் பகுதியில் பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருவதாக சென்னை பாலியல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு விரைந்த போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சைதாப்பேட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற 70 வயது முதியவர் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்து சிறுமியை மீட்டனர்.
கைதான ராமச்சந்திரனிடம் நடத்திய விசாரணையை அடுத்து சென்னையில் பள்ளி மாணவிகள், சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளியதாக தி.நகரைச் சேர்ந்த நதியா, அவருடைய சகோதரி சுமதி மற்றும் வன்கொடுமை செய்தவர்கள் என 8 பேரை போலீஸார் அடுத்தடுத்து கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பள்ளி படிக்கும் சிறுமிகளை குறிவைத்து பணத்தாசை காட்டி மூளைச்சலவை செய்து அவர்களை பாலியல் தொழிலில் தள்ளி, பின் அதனை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி மாணவிகளை தொடர்ந்து பாலியல் தொழில் ஈடுபடுத்தி வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுவரை 17 பள்ளிச் சிறுமிகள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் தொழிலில் இக்கும்பல் தள்ளி அதன்மூலம் வட மாநில தொழிலதிபர்களுக்கு பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தி வந்தது, இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மாணவிகளை பயன்படுத்திக் கொண்ட நபர்களின் பட்டியலை பாலியல் தடுப்பு பிரிவு போலீஸார் சேகரித்து வந்தனர். அதன் அடிப்படையில் தற்போது தி.நகரைச் சேர்ந்த குடியிருப்பு மேலாளர் ஒருவரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில் அவர் ஏற்கெனவே கைதான நதியாவுக்கு வலதுகரமாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. தொழிலதிபர்களுக்கு எந்த சிறுமியை அனுப்ப வேண்டும், சென்னையில் போலீஸிடம் சிக்காமல் எந்த பகுதியில் அறை எடுக்க வேண்டும் என்பது குறித்து நதியாவுக்கு திட்டம் தீட்டி கொடுத்து வந்ததும் இவர்தான் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கின் பின்னணியில் மேலும் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். அடுத்தடுத்து கைது நடவடிக்கைகளும் நடந்து வருகிறது.