அந்தச் சிறு வீட்டை ஜன்னல் வழியாக ஊடுருவிப் பார்க்கிறேன். சுவரிலும் தரையிலும் ரத்தக் கறை. மூக்கைத் துளைக்கும் ரத்த வாடை உடலை என்னவோ செய்கிறது. அந்தச் சம்பவம் எப்படி நிகழ்ந்திருக்கக் கூடும்? ஊகங்களின் வழியாகக் கண்ணுக்குள் காட்சிகள் விரிகின்றன.
இதோ வீட்டின் எதிரே பரந்துவிரிந்திருக்கிறது வயல்வெளி. தெரு விளக்கு இல்லை. அரையிருட்டில் இந்த வயல் வழியாகத்தான் அந்தக் கொடூரன் வந்திருக்க வேண்டும். வீட்டின் தகரக் கதவு துருப்பிடித்துத் தூர்ந்துபோயிருக்கிறது. இதைத் திறப்பது ஒன்றும் அவ்வளவு சிரமம் இல்லை. இப்படித்தான் உள்ளே நுழைந்த அந்தக் கொடூரன் சில நிமிடங்களில் அத்தனை கொடூரத்தையும் நிகழ்த்திவிட்டுச் சென்றிருக்கிறான்.
தலையிலும் முகத்திலும் கூர்மையான இரும்புத் தடி போன்ற ஆயுதத்தால் தாக்கப்பட்டு மூளை சிதறி உயிரிழந்திருக்கிறான் ஒன்பது வயதுச் சிறுவன் சமயன். கிட்டத்தட்ட அதே பாணியிலான தாக்குதலில் முகங்கள் சிதைந்து நினைவு திரும்பாமல் மருத்துவமனையில் இருக்கிறார்கள் ஆராயியும் அவரது 14வயதான மகள் தனமும். பாலியல் வன்முறை நடந்திருக்கவும் வாய்ப்பு இருக்கலாம் என்கிறார்கள்.
புரியாத புதிர் என்னவெனில் இவ்வளவு பெரிய தாக்குதலில் சிறு போராட்டத்துக்கான அறிகுறிகள்கூட அங்கில்லை. மிகச் சிறிய அந்த அறையில் நான்கு பிளாஸ்டிக் குடங்கள் அடுக்கியது அடுக்கியபடி இருக்கின்றன.