சிக்கினார் சுழல் விளக்கு ஓபீஸர்!


ஸ்பீல்பெர்க்கின் ‘கேட்ச் மீ இஃப் யூ கேன்’ பட நாயகன், விதவிதமான கெட்டப்பில் புகுந்து தில்லாலங்கடி காட்டுவார். போலி ஆவணங்களைக் காட்டி போட்டுத்தாக்கும் அதேபோன்ற கேரக்டர் சேலத்தில் சிக்கியிருக்கிறது.

போலி ஐ.ஏ.எஸ். விஜயகுமார் சாரை(!) சேலத்து மக்கள் நன்கு அறிவர். பின்ன.. அரசு வேலைக்கும் ஆளை மாத்துறதுக்கும் ஐயாக்கிட்ட கொஞ்ச நஞ்சமா குடுத்து இழந்துருக்காங்க! இவரு சும்மா இருந்தாலும் சுத்தியிருக்கிற தோலான் துருத்திகள்,  ‘எல்.விஜயகுமார்னா என்னன்றீங்க..  ‘லாயல்’ விஜயகுமார்னு அர்த்தம் தெரியுமா’ன்னு சும்மா உட்கார்ந்திருக்கிறவனை எல்லாம்  உசுப்பேத்துவார்கள்.

‘மண்டல வளர்கல்வி வாரியம்’ - ஊரை அடித்து உலையில் போடுவதற்காக 2003-ல், விஜயகுமார் தொடங்கிய ‘உன்னத'மான அமைப்பு இது. இவர்தான் அதுக்கு சீனியர் ஓபீஸர். கடை விரிச்சதுமே சுழல் விளக்கு காரும் கோட்டும் சூட்டுமாய் கலக்கிய  இந்த மைனர், புல்லரிக்கும் பூனைப் படையும் அமைத்துக் கொண்டார்.

போகும் இடமெல்லாம், ‘ஐயாவால முடியாத காரியம் எதுவுமே இல்லையாக்கும்’ என்று  அல்லக் கைகள் ரீல் விடும். இதை நம்பி, ‘கருப்பன் எதுக்கோ கன்னக்கோல் வைக்கப் போறானே' எனத் தெரியாமல் மாங்கனி தேசத்து மக்கள் மானாங்கன்னியாக காசு பணத்தை எண்ணிக் கொடுத்தனர் - காரியம் முடிக்க. அத்தனையும் சுருட்டிக் கொண்டு ஆள் எஸ்கேப். சமூக நலத் துறையில் அரசுப் பணிக்கான ஆணைகளை வழங்குமளவுக்கு தில்லான போதுதான் விஜயகுமார் போலீஸில் சிக்கினார்.

x