‘கில்லி’ படத்தின் மறு வெளியீடு மாபெரும் வெற்றியடைந்த காரணத்தினால், தற்போது பல படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், எதுவுமே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. எனினும், சில படங்களின் அறிவிப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவற்றின் பட்டியல் இது...
மே 1-ல் அஜித்தின் ‘வீரம்’ - 2014-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி வெளியான படம் ‘வீரம்’. விஜய புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் வெளியானது. இதில் அஜித், தமன்னா, சந்தானம், விதார்த், பாலா, நாசர், ரமேஷ் கண்ணா, அதுல் குல்கர்னி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. கிராமத்து பின்னணியில் உருவாக்கப்பட்ட இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம், அஜித் பிறந்த நாளான மே 1 அன்று ரீ-ரிலீஸ் ஆகிறது ‘வீரம்’. இதற்கான புதிய டீசரை அர்ஜுன் தாஸ் வெளியிட்டுள்ளார்.
ஏப்.18-ல் சச்சின் - மறைந்த இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கத்தில் விஜய், ஜெனிலியா, பிபாஷா பாசு, வடிவேலு, தாடி பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘சச்சின்’. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல்கள், காமெடி காட்சிகள் என அனைத்துமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. விஜய்யின் ‘சச்சின்’ ஏப்ரல் 18-ம் தேதி திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்படுகிறது.
‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ - தாணு தயாரிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான படம் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’. மம்முட்டி, அஜித், தபு, ஐஸ்வர்யா ராய், அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பணிபுரிந்திருந்தார்கள். இப்படத்தின் ‘என்ன சொல்லப் போகிறாய்’ என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதினை வென்றார் சங்கர் மகாதேவன். 2000-ம் ஆண்டில் மே 5-ம் தேதி இப்படம் வெளியானது. பல்வேறு விருதுகளை வென்றாலும், எதிர்பார்த்த வசூலை இப்படம் ஈட்டவில்லை. தற்போதைய காலத்துக்கு ஏற்றவகையில் மேம்படுத்தப்பட்டு, விரைவில் வெளியீட்டு தேதியை அறிவிக்கவுள்ளது படக்குழு.
சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ - சேரன் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்த படம் ‘ஆட்டோஃகிராப்’. கடந்த 2004-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. தற்போது இப்படத்தை டிஜிட்டல் முறையில் மாற்றி மறுவெளியீடு செய்ய படக்குழு தயாராகி வருகிறது. மே மாதம் சரியான வெளியீட்டு தேதிக்காக படக்குழு காத்திருக்கிறது. இப்படத்தின் மறுவெளியீட்டை முன்னிட்டு ஏஐ தொழில்நுட்பத்தில் வீடியோ ஒன்றிணை உருவாக்கி வெளியிட்டது. இந்த வீடியோ பதிவு இணையத்தில் ட்ரெண்ட்டானது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த்தின் ‘கேப்டன் பிரபாகரன்’ - 1991-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி வெளியான படம் ‘கேப்டன் பிரபாகரன்’. இப்ராஹிம் ராவுத்தர் தயாரிப்பில் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வெளியானது. இதில் விஜயகாந்த், ரூபிணி, சரத்குமார், மன்சூர் அலிகான், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதற்கு இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்திருந்தார். இப்படத்தின் காட்சி அமைப்புகள், சண்டைக் காட்சிகள், பாடல்கள் என அனைத்து விதத்திலும் கொண்டாடப்பட்டது. இப்படம் ரீரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
இப்படம் வெளியாகி 34 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இதனைக் கொண்டாடும் விதமாக 4கே தரம் உயர்த்தப்பட்டு விரைவில் மறுவெளியீடு செய்யப்படவுள்ளது. பிலிம் விஷன் நிறுவனத்தின் ராமு இப்படத்தினை 4கே தரத்திலும், 7.1 சவுண்ட் மிக்ஸிங் முறையில் ரீமாஸ்டர் செய்திருக்கிறார். இப்படத்தின் மறுவெளியீட்டு உரிமையினை முருகன் ஃபிலிம் பேக்டரி மற்றும் ஸ்பேரோ சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து கைப்பற்றி இருக்கின்றன. விரைவில் இப்படத்தின் வெளியீட்டு தேதியினை அறிவித்து, விளம்பரப்படுத்த உள்ளார்கள்.