சென்னை: நடிகர் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் தமது 3 பாடல்களை பயன்படுத்தியதற்கு ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா பட தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
பிரபல நடிகர் அஜித்குமார் நடித்துள்ள படம் ‘குட் பேட் அக்லி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் கோடிக்கணக்கில் வாரி குவித்து வருகிறது. இந்தப் படத்தில் இளையராஜா இசையமைத்த ‘ஒத்த ரூபாயும் தாரேன்’, ‘என் ஜோடி மஞ்ச குருவி’, ‘இளமை இதோ இதோ’ ஆகிய 3 பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை மைதிலி மூவீஸ் மேக்கர் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த சூழலில் படத்தில் தனது அனுமதி பெறாமல் பாடல்களை பயன்படுத்தியுள்ளதாக இளையராஜா சார்பில் அவரது வழக்கறிஞர் தியாகராஜன் தயாரிப்பு நிறுவனத்திற்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸில், ‘படத்தில் இந்த 3 பாடல்களை பயன்படுத்தியதற்காக தமக்கு இழப்பீடாக ரூ.5 கோடி தரவேண்டும். 3 பாடல்களையும் படத்தில் உடனடியாக நிறுத்த வேண்டும், 7 நாட்களுக்குள் படக்குழுவினர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த படத்தில் பாடல்கள் பயன்படுத்தப்பட்டு பெறப்பட்ட வருமானத்தின் கணக்கு விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். ரூ. 5 கோடி இழப்பீடு வேண்டும், இல்லையெனில் வழக்கு தொடரப்படும். இது குறித்து 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.