நடிகர் ஸ்ரீ-க்கு என்னதான் ஆச்சு? - தமிழ்த் திரையுலகம் கலக்கம்


சென்னை: நடிகர் ஸ்ரீ-யின் சமீபத்திய புகைப்படங்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு உறுதுணைபுரிய முயன்று வருவதாக ‘இறுகப்பற்று’ தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவும் கூறியிருப்பது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘வழக்கு எண் 18/9’, ’மாநகரம்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘வில் அம்பு’ மற்றும் ‘இறுகப்பற்று’ ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் நடிகர் ஸ்ரீ. சமீப காலமாக இவர் நடிப்பில் படம் ஏதும் வெளிவராத நிலையில், அவரது புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் பலவும் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

ஸ்ரீ தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படங்கள், வீடியோக்களில், அவரது உடல் மிகவும் மெலிந்து காணப்பட்டது. அவரது முடியும் கலரிங் செய்யப்பட்டு அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியிருந்தார்.

சமீபத்தில் எந்தவொரு படத்துக்காகவும் யாருமே இவரை அணுக முடியவில்லை என்றும், அவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார் என்றும் தமிழ் திரையுலகில் சலசலப்பு நிலவியது. அவரது உடல்நிலை குறித்தும் பல்வேறு தகவல்களும், ரசிகர்களின் அதிர்ச்சியான ரியாக்‌ஷன்களும் வந்த வண்ணம் இருந்தன.

ஸ்ரீயின் அவல நிலைக்கு காரணம், அவருக்கு திரையுலகில் முறையான சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. குறிப்பாக ‘இறுகப்பற்று’ தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபுவை பலரும் சாடினர்.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் விதமாக விளக்கம் அளித்துள்ள தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, “ஸ்ரீயின் உடல்நிலை, வாழ்க்கை பற்றி நாங்கள் உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ளோம். நாங்கள் உட்பட அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நீண்ட காலமாக தொடர்பு கொள்ள முயன்று வருகிறோம். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது குறித்து ஏராளமான ஊகங்கள் பரவி வருகின்றன.

ஆனால், ஸ்ரீயை தொடர்புகொண்டு அவரை மீண்டும் நல்ல ஆரோக்கியத்துக்கு கொண்டு வருவதே முதல் முன்னுரிமை. அதை அடைய யாராவது எங்களுக்கு உதவ முடிந்தால் மிகவும் நன்றி” என்று தெரிவித்துள்ளார் எஸ்.ஆர்.பிரபு.

x