நடிகர் பிரசாந்துக்கு நேற்று பிறந்த நாள். அதை முன்னிட்டு அவரது புதிய படம் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அவரது 55-வது படமான அதை, ஹரி இயக்குகிறார். பிரசாந்தும் ஹரியும் இணைந்து ஏற்கெனவே 2002-ம் ஆண்டு ‘தமிழ்’ படத்தில் இணைந்திருந்தனர். 23 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளனர்.
இதற்கான விழாவில் பிரசாந்த் பேசும்போது, “ஹரி சாரும் நானும் சேர்ந்து மீண்டும் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறோம். இது மிகப்பெரிய படமாக இருக்கும். பார்வையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதமாகவும் இன்றைய தலைமுறைக்கும் அடுத்த தலைமுறை ரசிகர்களுக்கும் பிடித்த மாதிரி இந்தப் படம் இருக்கும்.
கதையுடன் ஃபேமிலி சென்டிமென்ட்டும் இருக்கும். வழக்கமாக ஹரி சார் படங்களில் இருப்பதைப் போல இந்தப் படத்தின் திரைக்கதையும் வேகமாகவே இருக்கும்” என்றார்.
இயக்குநர் ஹரி பேசும்போது, “நான் சரண் இயக்கிய ‘பார்த்தேன் ரசித்தேன்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய போது,
அதில் நடித்த பிரசாந்திடம், கிடைக்கும் நேரத்தில் சின்ன சின்ன காட்சிகளாகச் சொல்வேன். அந்த நம்பிக்கையில் என முதல் பட வாய்ப்பை ‘தமிழ்’ மூலம் கொடுத்த அவருக்கு இப்போது நன்றி.
2001-ம் ஆண்டு பிரசாந்த் பிறந்த நாளான இதே தினத்தில்தான் ‘தமிழ்’ படத்தின் பூஜை நடந்தது. 24 வருடங்களுக்குப் பிறகு இதே
தேதியில் புதிய படத்துக்காக இணைந்திருக்கிறோம்” என்றார். இந்தப் படத்தை ஸ்டார் மூவிஸ் சார்பில் நடிகர் தியாகராஜன் தயாரிக்கிறார்.