‘டெஸ்ட்’ விமர்சனம்: ப்ளஸ், மைனஸ் என்னென்ன?


சசிகாந்த் இயக்கத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த் நடித்து நெஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆகியுள்ள ‘டெஸ்ட்’ (Test) படத்தின் ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட் இது...

இந்திய டெஸ்ட் அணி ஜாம்பவானான சித்தார்த்தின் கிரிக்கெட் இறுதிக் காலம், நீரில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் ஆராய்ச்சியில் வாழ்க்கையை அர்ப்பணித்து, பணப் பிரச்சினையில் துவளும் மாதவன், அவருக்கு உறுதுணையாக இருந்து நீண்ட காலமாக குழந்தைக்கு ஏங்கும் நயன்தாரா... இந்த மூன்று கதாபாத்திரங்களையும் மையப்படுத்திய ஒன்லைன் முதன்மை ப்ளஸ்.

‘டெஸ்ட்’ என்பது மையம் தான் என்றாலும், கிரிக்கெட்டை தாண்டி அரசியல், சூதாட்டம், குடும்ப உளவியல் என பல விஷயங்களை திரைக்கதையின் ஊடாகப் பேசுவது மற்றொரு பெரிய ப்ளஸ்.

குறிப்பாக, படத்தின் தொடக்கத்தில் முதன்மைக் கதாபாத்திரங்களின் பின்புலங்களை காட்டிய விதமும், அதன் மூலம் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பைத் தூண்டிய விதமும் ப்ளஸ்.

மாதவன், நயன்தரா, சித்தார்த் கதாபாத்திரங்களை அவரவர் நியாயங்களுக்கு ஏற்ப உளவியல் ரீதியில் ரசிகர்களை அணுக வைத்திருக்கும் நேர்த்தியான உத்தியும் ப்ளஸ்தான்.

குறிப்பாக, மாதவன் - நயன் இடையிலான உறவின் ஆழத்தையும், கணவன் - மனைவி பிரச்சினைகளையும் கச்சிதமாக காட்சிப்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிட்டே ஆக வேண்டிய ப்ளஸ் பாயின்ட்.

மாதவன், நயன்தரா, சித்தார் ஆகியோர் படம் தொடங்கிய சில நிமிடங்களுக்குப் பின், அந்தந்த கதாபாத்திரங்களாகவே நம் முன் தோன்றும் அளவுக்கு மிகச் சிறப்பான நடிப்பை பதிவு செய்துள்ளது படத்துக்கு பக்கா ப்ளஸ். கூடவே, சித்தார்த் மனைவியாக வரும் மீரா ஜாஸ்மினும், அவர்களின் பையனும் உறுதுணை நடிப்பில் ஈர்க்கின்றனர்.

பின்னணி இசை, ஒளிப்பதிவு மற்றும் டெக்னிக்கல் ஏரியா அனைத்துமே படத்துக்கு வலுவூட்டும் ப்ளஸ்கள். ஆனால், அட்டகாசமான டிராமாவில் தொடங்கி த்ரில்லர் பாணிக்கு நகரும்போது திரைக்கதை சற்றே சொதப்ப ஆரம்பிப்பது மைனஸ்.

மிகக் குறிப்பாக, மாதவன் கதாபாத்திரத்தின் ‘அதிரடி’ மாற்றங்களை பார்வையாளர்கள் ஏற்கும்படி எழுதாததும் காட்சிப்படுத்தாதும் மற்றொரு மைனஸ். படம் ஆரம்பத்ததில் இருந்து குறைவின்றி எங்கேஜிங்காக நகர்ந்த நிலையில், பிற்பகுதியில் நிறைந்துள்ள ‘இழுவை’யும் மைனஸ்தான்.

சுவாரஸ்ய திரைக்கதையில் மைனஸ் இருப்பினும், ஒட்டுமொத்தமாக பார்வையாளர்களின் நேரத்துக்கு ‘ஒர்த்’தாக இருப்பதால் கூடுதல் ப்ளஸ் உடன் பாஸ் மார்க் வாங்குகிறது இந்த ‘டெஸ்ட்’.

x