Top 5 Cine Bits: அடங்காத ‘எம்புரான்’ சர்ச்சை முதல் ‘ஜன நாயகன்’ ஓடிடி உரிமம் வரை!


‘எம்புரான்’ படத்துக்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு: ‘எம்புரான்’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி விஜேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், ‘இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகள் குஜராத் கலவரத்தை நினைவுபடுத்தும் விதமாக உள்ளன. இந்தப் படம், தேச விரோத விஷயங்களை ஊக்குவிக்கிறது. மாநிலத்தில் வகுப்புவாத வன்முறையைத் தூண்ட முயற்சிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் ‘எம்புரான்’ படத்துக்கு இடைக்கால தடை விதிக்க கேரள உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருக்கும் படம், ‘எல் 2: எம்புரான்'. இதில் மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் இதுவரை ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள கலவரம் தொடர்பான காட்சிகள் குஜராத்தில் 2002-ல் நடந்த சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும், இந்துத்துவ கொள்கைகளை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும் வலதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதையடுத்து, நடிகர் மோகன் லால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மன்னிப்புக் கோரி, சர்ச்சையான காட்சிகள் நீக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், மோகன்லாலுக்கு வழங்கப்பட்ட கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவியை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஸ்பைடர் மேன் 4’ தலைப்பு: சூப்பர் ஹீரோ கதையை கொண்ட ‘ஸ்பைடர் மேன்’ படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 8 ஸ்பைடர் மேன் திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் டாம் ஹாலண்ட் ஸ்பைடர் மேனாக நடித்து ‘ஸ்பைடர் மேன்: ஹோம் கமிங்' , ‘ஸ்பைடர் மேன்: ஃபார் ஃபிரம் ஹோம்’, ‘ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்’ ஆகிய 3 படங்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, இப்போது அவர் நடிப்பில் நான்காவது படம் உருவாகிறது.

இந்தப் படத்துக்கு ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்த சினிமா கான் விழாவில், இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரெட்டன் அறிவித்தார். கோடையில் இதன் படப்பிடிப்புத் தொடங்குகிறது. அடுத்த ஆண்டு ஜூலை 31-ல் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்தார் 2 - கார்த்தி தகவல்: பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தியின் ‘சர்தார் 2’ படத்தில் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் குற்த்து கார்த்தி கூறும்போது, “‘சர்தார்’ என்று பெயர் வைத்ததில் இருந்தே இந்தப் படத்தின் மீது எனக்கு ஆர்வம் உண்டு. ஒரு கிராமத்து நாடக நடிகனை, பயிற்சி கொடுத்து ‘ஸ்பை’யாக்கி நிறைய விஷயங்கள் பண்ணியிருக்கிறார்கள்.

உண்மையில் நடந்த சில விஷயங்களின் இன்ஸ்பிரேஷனில் இருந்து இயக்குநர் அந்த கதையை உருவாக்கி இருந்தார். பொது நலனுக்காகப் போராடுகிற ஒரு கேரக்டர்தான் அது. அந்தக் கதாபாத்திரம் திரும்பி வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். அப்படி வந்தால், என்ன நோக்கம் இருக்கும் என்று கேள்வி எழுந்தது. உண்மையிலேயே இதில் ஒரு பெரிய விஷயத்தை இயக்குநர் சொல்லி இருக்கிறார். ஹீரோ - வில்லன் இரண்டு பேருமே வலுவானவர்களாக இருந்தால்தான் போர் சுவாரஸ்யமாக இருக்கும். அப்படி இந்தப் படம் மிகப்பெரிய போரைப் பற்றிப் பேசப்போகிறது” என்றார்.

விஷால் ஜோடியாக துஷாரா விஜயன்: ‘வீர தீர சூரன் பார்ட் 2’ வெற்றியால் உத்வேகத்துடன் துஷாரா விஜயனிடம் விஷாலுக்கு நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அவரும் கதையைக் கேட்டுவிட்டு சம்மதம் தெரிவித்திருக்கிறார். விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனத் தெரிகிறது.

‘ஜன நாயகன்’ ஓடிடி உரிமம்: கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் விஜய் படம் ‘ஜன நாயகன்’. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பாபி தியோல், கவுதம் மேனன், பிரியாமணி, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

‘ஜன நாயகன்’ படத்தின் ஓடிடி உரிமத்தைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இதில் ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனத்துடன் கடும் போட்டியை சந்தித்த அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் ஓடிடி உரிமத்தை ரூ.120 கோடிக்கு வசப்படுத்தி இருக்கிறதாம். இந்தி வெளியீட்டை கணக்கில் கொண்டு 8 வாரத்துக்கு பின்பே ஓடிடி வெளியீடு இருக்குமாம்.

x