‘எம்புரான்’ சர்ச்சையில் படக்குழு ‘சரண்டர்’ - மோகன்லால் மன்னிப்புக் கோரியது ஏன்?


‘எம்புரான்’ படம் சர்ச்சையில் சிக்கி மீண்டும் தணிக்கை செய்யப்பட்டு, அதிலிருந்து சில காட்சிகள் நீக்கப்பட்டு, பல வசனங்கள் மியூட் செய்யப்படவுள்ளது. இது குறித்து மோகன்லால் விளக்கம் அளித்துள்ளார்.

மார்ச் 27-ம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான படம் ‘எம்புரான்’. ப்ருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருந்த இப்படம் இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் வெளியானது. டிக்கெட் முன்பதிவில் மட்டுமே வசூல் சாதனை படைத்தது. இப்படம் விமர்சன ரீதியாக போதிய வரவேற்பினை பெறவில்லை. அதுமட்டுமன்றி சர்ச்சையிலும் சிக்கியது.

குறிப்பாக, குஜராத் கலவரத்தையொட்டிய பகுதிகள் எதிர்ப்பலையை தோற்றுவித்தன. இன்னொரு பக்கம் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் தரப்பில் இருந்து ஆதரவும் பெருகியது.

இந்து மதத்தினை புண்படுத்துவதாக பல்வேறு தரப்பினரும் இப்படத்துக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுப்பினர். இதற்கு படக்குழுவினர் சார்பில் சில காட்சிகளை நீக்கி, வசனங்கள் சத்தமின்றி செய்து மீண்டும் தணிக்கை செய்து புதிய பதிப்பு மாற்றப்படும் என கூறப்பட்டது. இதற்கு ஒரு தரப்பினர் எப்படி தணிக்கை செய்யப்பட்ட படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்று குரல் கொடுக்க தொடங்கினார்கள்.

இந்த சர்ச்சை தொடர்பாக மோகன்லால் தனது ஃபேஸ்புக் பதிவில் “‘லூசிஃபர்’ படத்தின் இரண்டாம் பாகமான ’எம்புரான்’ படத்தில் வெளிவந்த சில அரசியல் மற்றும் சமூக கருத்துகள் ஏராளமான மக்களை வேதனைப்படுத்தியுள்ளதாக அறிகிறேன். ஒரு கலைஞனாக, எனது படம் எந்த அரசியல் இயக்கம், சித்தாந்தம் அல்லது மதப் பிரிவின் மீதும் எந்த விரோதத்தையும் கொண்டிருக்காமல் பார்த்துக் கொள்வது எனது பொறுப்பு.

எனவே, நான் மிகவும் நேசிக்கும் நபர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நானும், ‘எம்புரான்’ குழுவினரும் மனதார வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். அதற்கான பொறுப்பு படத்தின் பின்னணியில் பணியாற்றிய நம் அனைவரிடமும் உள்ளது என்பதை உணர்ந்து, அத்தகைய கருத்துக்களை படத்திலிருந்து நீக்க முடிவு செய்துள்ளோம்.

கடந்த நான்கு தசாப்தங்களாக நான் உங்களில் ஒருவராக என் திரைப்பட வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். உங்கள் அன்பும் நம்பிக்கையும்தான் எனது ஒரே பலம். அதை விட பெரிதாக மோகன்லால் இல்லை என்று நான் நம்புகிறேன்” என்று மோகன்லால் தெரிவித்துள்ளார்.

x