இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியரான சந்தியா சூரி என்பவர் இயக்கிய படம், ‘சந்தோஷ்'. இந்தப் படம் இங்கிலாந்து சார்பில் ஆஸ்கர் விருது போட்டியில் கலந்து கொண்டது. ஆனால் விருது கிடைக்கவில்லை. பல்வேறு விருது விழாக்களில் கலந்து கொண்ட இந்தப் படத்தை இந்தியாவில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்தப் படத்தைப் பார்த்த திரைப்பட தணிக்கை வாரியம் இந்தியாவில் வெளியிடத் தடை விதித்தது.
இதில் உள்ள கருத்துகள் இந்தியாவில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்றும் சில காட்சிகள், வசனங்களை நீக்கினால் மட்டுமே வெளியிட அனுமதிக்கப்படும் என்று தணிக்கை வாரியம் கூறியதை, படக்குழு ஏற்க மறுத்து விட்டது. கணவன் இறந்த பிறகு காவல் பணியில் சேரும் வட இந்திய பெண்ணின் கதையைக் கொண்ட இந்தப் படத்தில், அங்கு நிலவும் சாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு, பாலியல் வன்முறை என்பது உள்ளிட்ட பிரச்சினைகள் பேசப்படுவதாகக் கூறப்படுகிறது.